முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர்களில் ஒருவர் சிம்புதேவன். 2006ம் ஆண்டு நடிகர் வடிவேலு முதல் முறையாக ஹீரோவாக நடித்து சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற நகைச்சுவை திரைப்பமான 'இம்சை அரசன் 23ம்' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். அதை தொடர்ந்து அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும், புலி, கசட தபற உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது தனது அடுத்த படைப்பு மூலம் ரசிகர்களை கவர தயாராக இருக்கிறார்.
யோகி பாபு லீட் ரோலில் நடிக்கும் இப்படம் 80 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் நடைபெற்ற ஒரு கதைக்களத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதற்கு 'போட்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஜப்பான் நாடு மெட்ராஸ் ப்ரெசிடென்சி மீது குண்டு வீசிய போது 10 நபர்கள் மட்டும் பே ஆஃப் பெங்கால் கடற்கரை மூலம் உயிர் தப்பி பதுங்கினார். அதில் போட் மேனாக யோகி பாபு நடிக்க எம்.எஸ். பாஸ்கர், சின்னி ஜெயந்த், மதுமிதா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க இப்படத்தின் கதைக்களம் கடலில் நடப்பது போல திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மாலி மற்றும் மான்வி மூவி மேக்கர்ஸ் மற்றும் சிம்புதேவன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.