இயக்குநர் சேரன் கதையின் நாயகனாக நடித்து, தயாரித்து, இயக்கிய 'ஆட்டோகிராப்' திரைப்படம் வரும் 14ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 2004ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படம் நவீன தொழில்நுட்பத்துடன் புதுபிக்கப்பட்டு வெளியாகிறது.
சேரனின் ஆட்டோகிராப் ரீயுனியன்
இந்நிகழ்வில் சேரன், நடிகை சினேகா, சேரனின் உதவியாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெகதீசன், பாண்டிராஜ், உமாபதி, ஜெகன், பாடல் ஆசிரியர் சினேகன், இசையமைப்பாளர்கள் பரத்வாஜ், முரளி, கலை இயக்குநர்கள் வைரபாலன், ஜே.கே, மணி ராஜ், நடிகர் கணேஷ் பாபு, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன், இயக்குநர் அமீர், நடிகர் ஆரி ஆகியோர் கலந்து கொண்டனர். இயக்குநர் பாண்டிராஜ் பேசுகையில் சேரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அனுபவம் பற்றியும் தனது படங்களில் சேரனின் தாக்கம் குறித்து பேசினார்
ஆட்டோகிராப் கதையை ரிஜெக்ட் செய்த விஜய்
''நான் சேரன் அவர்களிடம் உதவியாளராக சேர்ந்த போது அவர் ஒரு முறை 'பாரஸ்ட் கம்ப்' என்ற படத்தை பார்த்தார். இதேபோல் ஒரு கதையை எழுத வேண்டும் என்று எங்களிடம் சொன்னார். அதன் பிறகு ஒரு வாரம் கழித்து எங்களிடத்தில் 'ஆட்டோகிராப்' படத்தின் கதையை சொன்னார். அவருடன் அலுவலகத்தில் ஒன்றாக தங்கி இருந்தேன். அது ஒரு அற்புதமான அனுபவம். அவருடைய கோபம், பாசம், வருத்தம், துக்கம் என எல்லாவற்றையும் ஜெகனுடனும், என்னுடனும் பகிர்ந்து கொள்வார்.
இந்தப் படத்தில் அனைவரும் புதிதாக இருக்கிறார்கள் . படத்திற்கு கமர்ஷியல் முகம் வேண்டும் என்பதற்காக நடிகை சினேகாவிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்தக் கதை ராமகிருஷ்ணன் குறிப்பிட்டது போல் நடிகர் விஜய்க்கு சென்றது. அதன் பிறகு நடிகர் பிரபு தேவாவிடம் சென்றது. அதன் பிறகு அரவிந்த்சாமியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடிகர் ஸ்ரீகாந்திடமும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆட்டோகிராப் படத்தில் சேரன் நடிக்க வேண்டும் என ஒருபோதும் அவர் விருப்பப்படவில்லை. ஆட்டோகிராப் என்னும் கதை தான் அவரை நடிகராக உள்ளிழுத்துக் கொண்டது. அவர் நடிக்கப் போகிறேன் என்று சொன்னதும் நானும், சிம்பு தேவனும் தான் எதிர்ப்பு தெரிவித்தோம். படம் வெற்றி பெற்ற பிறகு சேரன் மற்றும் இதர உதவியாளர்கள் என்னை அர்த்தத்துடன் பார்த்தனர். எங்கள் இயக்குநர் எத்தனையோ அசிங்கங்கள், அவமானங்கள் பட்டாலும் அந்தப் படத்தை நேர்மையாக கடினமாக உழைத்து உருவாக்கினர். இயக்குநரான பிறகு தான் அதனுடைய கஷ்டம் என்ன என்பது எனக்குத் தெரிந்தது. அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். என்னுடைய அனைத்து படங்களிலும் அவருடைய பாதிப்பு இருக்கும். அவருடைய பாதிப்பில்லாமல் என்னால் படம் எடுக்க இயலாது. இந்தப் படத்தை இந்தக்கால இளைய தலைமுறையினரும் கொண்டாடுவார்கள்,'' என்றார்.