நடிகர் விஜய் நடிக்கும் The Greatest of All Time படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லியோ படத்திற்கு நடிகர் விஜய் The Greatest of All Time என்ற படத்தில் நடித்து வருகிறார். பிகில் படத்துக்கு பிறகு இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், பிரேம்ஜி அமரன், வைபவ், விடிவி கணேஷ் என ஏகப்பட்ட பேர் இடம் பெற்றுள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Greatest of All Time படத்தில் விஜய் அப்பா- மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி The Greatest of All Time படத்தில் இருந்து விசில் போடு பாடல் வெளியானது. விஜய் பாடிய இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிக்க வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் கோட் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் ரஷ்யாவில் நடந்து வருகிறது. அடுத்த அப்டேட் ஜூன் 22 ஆம் தேதி விஜய் பிறந்தநாளன்று வெளியாகும் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தான், அஜ்மல் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் முக்கியமான விஷயம் பற்றி பேசியுள்ளார்.
அதில் The Greatest of All Time படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறதே? என்ற ரீதியில் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு, ”எதையும் நான் இப்போது கூற முடியாது. ஏஜிஎஸ் நிறுவனமும், வெங்கட் பிரபுவும் படம் பற்றிய சுவாரஸ்ய முடிச்சுகளை ஒவ்வொன்றாக வெளியிடுவார்கள்” என தெரிவித்துள்ளார். இதனால் அந்த சென்னை அணி வீரர்கள் யார்? யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே ஃபிலிம் சிட்டியில் நடந்த இருவேறு ஷூட்டிங்கின்போது தோனியும், விஜய்யும் சந்தித்து கொண்டனர். இதன் புகைப்படம் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.