நடிகர் மன்சூர் அலிகான் நடித்துள்ள ”சரக்கு” படத்தின் சிறப்பு திரையிடல் விழாவில் வழக்கறிஞர் ஒருவர் கடுமையாக வாக்குவாதம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக உள்ள மன்சூர் அலிகான் அடுத்ததாக “சரக்கு” என்னும் படத்தில் நடித்துள்ளார். ஜெயக்குமார் ஜே என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக வலினா பிரின்ஸ் நடித்துள்ளார். சிறப்பு தோற்றத்தில் பிரபல அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், மொட்டை ராஜேந்திரன், வினோதினி, கிங்ஸ்லி, ரவி மரியா, லொள்ளுசபா மனோகர், மதுமிதா, லியாகத் அலிகான், பயில்வான் ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படமானது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திருப்பி போடும் வகையில் இருக்கும் என நேர்காணல் ஒன்றில் மன்சூர் அலிகான் தெரிவித்த நிலையில் ஏற்கனவே ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இதுதொடர்பான நிகழ்ச்சியில் கூட நடிகர் கூல் சுரேஷ், அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளினிக்கு வலுக்கட்டாயமாக மாலை அணிவித்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.
இந்நிலையில் சரக்கு படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சி முடிந்ததும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது திடீரென கூட்டத்தின் உள்ளே வந்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஒருவர், சரக்கு படத்தின் இடம் பெற்ற கேரக்டர்கள் சிலவற்றை வன்மையாக கண்டித்தார். சரக்கு படத்தில் அட்வகேட் தொழிலை கொச்சைப்படுத்துவது போலவும், மார்க்கெட்டிங் தொழில் செய்வது போலவும் கேரக்டர்கள் உள்ளது. மன்சூர் அலிகான் நல்ல நடிகராக இருந்தாலும், வழக்கறிஞர் தொழிலை தவறாக சித்தரிப்பதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என தெரிவித்தனர்.
இதற்கு படக்குழுவினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். “யாரும் படத்தை கொச்சைப்படுத்தவில்லை, படத்தை பற்றியெல்லாம் கேள்வி கேட்காதீர்கள். மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. படத்தை படமாக பாருங்கள்” என தெரிவித்தனர். அப்போது தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தலைவர் செல்ல பாண்டியன் அந்த வழக்கறிஞரிடம் நேரடியாக சண்டைக்கு சென்றார்.
அதற்கு வழக்கறிஞர், ‘சரக்கு, சாராயம் பற்றி நான் பேசவில்லை. எங்க தொழில் பாதிக்குது. உங்களை எதிர்க்க வேண்டும் என செய்யவில்லை. அப்படத்தில் இடம் பெற்ற சில கேரக்டர்கள் பற்றி தான் பேசுகிறோம்” என மன்சூர் அலிகானிடம் தெரிவித்தார்.இதற்கு “நான் முறைப்படி சென்சார் பண்ணி தான் திரையிட்டுள்ளோம். அது தவறு என நினைத்தால் நீ கோர்ட்டுக்கு போ. உங்களை யார் அனுப்பி இருப்பார்கள் எனக்கு தெரியும். யார் வந்தாலும் இதனை தடுக்க முடியாது” என மன்சூர் அலிகான் தெரிவித்தார். இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.