தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் சரத்குமார். இன்றும் அதே சுறுசுறுப்புடன் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். நடிகர் சரத்குமார் முன்னாள் மனைவி சாயா சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் திருமணம் குறித்தும் விவாகரத்து குறித்தும் மனம் திறந்து பேசி  இருந்தார்.  


சரத்குமார் முன்னாள் மனைவி:


1984ம் ஆண்டு சரத்குமார் மற்றும் சாயாவிற்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு வரலக்ஷ்மி மற்றும் பூஜா என இரு மகள்கள் இருந்த நிலையில் 13 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2000ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். 


 



அதற்கு பிறகு 2001ம் ஆண்டு நடிகை ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் நடிகர் சரத்குமார். ராதிகாவுக்கும் இது இரண்டாவது திருமணம் தான். ஏற்கனவே அவருக்கு ராயனே என்ற ஒரு பெண் குழந்தை இருந்தது. 2004ம் ஆண்டு ராதிகா - சரத்குமார் தம்பதியினருக்கு ராகுல் சரத்குமார் என்ற மகன் பிறந்தார். அவர் தற்போது வெளிநாட்டில் பட்டப்படிப்பை படித்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் சரத்குமார் - ராதிகா 24வது திருமண விழாவை சமீபத்தில் தான் கொண்டாடினர். 


ஒரு நாள் கூத்து அல்ல:


சரத்குமார் முன்னாள் மனைவி சாயா சரத்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் "திருமணம் செய்வதற்கு இது தான் சரியான வயது என குறிப்பிட்டு சொல்ல முடியாது. திருமணம் செய்து கொள்ள உடல் அளவிலும், மனதளவிலும், எமோஷனலாகவும் தயாராக இருக்க வேண்டும். பலரும் தப்பான ஒரு காரணத்திற்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணம் எதற்காக நடக்கிறது என்பதே இங்கு பலருக்கும் தெரிவதில்லை. திருமணம் செய்து கொள்ள சரியான காரணம் ஒன்று இருக்க வேண்டும். அது ஒரு நாள் கூத்து அல்ல. 


திருமணம் என்பது ஒரு பயணம். அதில் சரியாக பயணம் மேற்கொள்ள வேண்டும். எந்த நேரத்திலும் சரியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் மனதில் இருக்க வேண்டும். சிலர் உடல் தேவைக்காக திருமணம் செய்து கொள்கிறார்கள். உடல் தேவை என்பது ஒரு சிறிய பகுதி தான். அதற்காக செய்து கொள்வதை எல்லாம் திருமணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. 


 



சரியான காரணத்திற்காக திருமணம் செய்து கொண்டால் தான் அந்த பயணம் மிக சிறப்பாக இருக்கும். அதுவே உங்களின் காரணம் தவறாக இருந்தால் அது பாதியிலேயே முடிவுக்கு வந்து விடும். அப்படி திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தால் மனதளவில், உடளவில் மட்டுமின்றி சமூக அளவிலும் பாதிப்பு ஏற்படும். அதுவே உங்களுக்கு ஒரு குழந்தை இருக்குமாயின் நிலை மிகவும் மோசமாக இருக்கும். அதனால் விவாகரத்து பெறுவதற்கு முன்னர் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும். 


பொருளாதார சுதந்திரம்:


பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் என்பது மிகவும் முக்கியம். எப்படிப்பட்ட பிரச்சினைகள், மோசமான சூழல் ஏற்பட்டாலும் இருவரும் சேர்ந்து இருக்க வேண்டும். விட்டுக்கொடுத்து வாழ உங்கள் மனது பக்குவப்பட்டு இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ளுங்கள். பார்ட்னரிடம் இருந்து எதையாவது எதிர்பார்த்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சந்தோஷமாக அமையாது. 


அப்படி முடியாத பட்சத்தில் தனியாக எப்படி சந்தோஷமாக வாழ்வது என்பதை தெரிந்து கொண்டு தனியாகவே வாழ்வது சிறந்தது" என கூறி இருந்தார் சாயா சரத்குமார். அவரின் இந்த நேர்காணல் தான் சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.