நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ படத்தில் வன்முறை நிறைந்துள்ளதாகவும், அப்படத்துக்கு தடை விதிக்கக்கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் 2வது முறையாக இணைந்த படம் ‘லியோ’. செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்த இந்த படம் கடந்த அக்டோபர் 19 -ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டையாடியது. லியோவில் த்ரிஷா,  கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், ஜனனி, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். 


ரிலீசுக்கு முன்பே ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்தது லியோ படம். இந்த படத்துக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சி கேட்டு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் அதற்கு நீதிபதிகள் மறுப்பு தெரிவித்தனர். இதனிடையே படமும் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை கவரவில்லை. ஆனால் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான லியோ படம்  வசூலில் ரூ.600 கோடிகளை குவித்தது. படத்தின் வெற்றி விழாவும் மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது


தொடர்ந்து லியோ படத்தில் இடம் பெற்ற காட்சிகளில் அதிக அளவு வன்முறை எழுந்ததாக சர்ச்சை எழுந்தது. பலரும் இதுதொடர்பான அதிருப்தியை தெரிவித்தனர். இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் பொங்கலுக்கு இப்படம் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது. இந்த நிலையில் வன்முறை காட்சிகள் நிறைந்த லியோ படத்துக்கு தடை விதிக்கக்கோரி, லோகேஷ் கனகராஜ் மீது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 


மதுரையைச் சேர்ந்த ராஜூ முருகன் சார்பாக அளிக்கப்பட்ட மனுவில், ‘லோகேஷ் வன்முறை, போதைப்பொருள் மூலம் சமூகத்திற்கு தவறான வழிகாட்டுதல்களை காட்டுகிறார். அவருக்கு உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்’ எனவும்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது திரையுலகில் மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ படத்தை இயக்கியவர் அடுத்ததாக ரஜினியை வைத்து படம் எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.