தமிழ் சினிமாவில் கருப்பு தங்கம், கேப்டன் என கொண்டாடப்பட்ட நடிகர் விஜயகாந்த் மறைவு திரையுலகத்தினரையும், ரசிகர்களையும், தொண்டர்களையும் மிகுந்த மன வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
கஷ்டப்பட்டு முன்னேறியவர்:
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான விஜயராஜ் நடிப்பின் மீது கொண்டிருந்த தீராத காதலால் சென்னைக்கு வந்து ஒவ்வொரு சினிமா கம்பெனியாக ஏறி ஏறி இறங்கிய போதிலும் பல காரணங்கள் காட்டி வாய்ப்பு கொடுக்க மறுத்தனர். தொடக்கத்தில் நிகரித்த தயாரிப்பாளர்களே ஒரு காலகட்டத்தில் அவரை தேடி வந்து வாய்ப்பு கொடுக்க கால் வலிக்க காத்திருந்த காலகட்டமும் வந்தது. இப்படி பல அவமானங்கள் கஷ்டங்களை தாண்டி சினிமாவில் ஜெயித்த ஒரு நடிகர்தான் விஜயகாந்த்.
வாய்ப்புகளை மறுத்தவர் :
பத்தே ஆண்டுகளில் ஒரு நடிகராக மிகப்பெரிய வெற்றியை பெற்ற நடிகர் விஜயகாந்த் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெரும். லெக் ஃபயிட் ஆக்ஷன் சீக்வென்ஸ் ஸ்பெஷலிஸ்ட் விஜயகாந்த் என சொல்லும் அளவுக்கு ஆக்ஷனில் கலக்கினார். அவரின் அதிரடி ஆக்ஷன் படங்களை பார்த்த மற்றும் மொழி தயாரிப்பாளர்கள் விஜயகாந்துக்கு அழைப்புவிடுக்க அதை எதையுமே அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதிலும் குறிப்பாக நடிகர் விஜயகாந்த் டாப்பில் இருந்த சமயத்தில் பெரும் தொகையை சம்பளமாக கொடுக்க, தெலுங்கு திரையுலகம் பல முறை முன்வந்தது. ஆனால் அவர் எந்த ஒரு வாய்ப்புக்கும் மனம் இறங்காமல் உறுதியுடன் இருந்தவர்.
பான் இந்தியன் ஸ்டார் ஆசையில்லை:
இன்றைய காலகட்டத்தில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவுடன் உடனே மற்ற மொழி படங்கள் பக்கம் சென்று அங்கு அவர்களின் திறமையை நிரூபிக்கவே ஆசைப்படுகிறார்கள். பான் இந்தியன் ஸ்டார் நடிகர் என்ற அந்தஸ்து இன்று மிக பெரிய கவுரவமாக பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் எந்த ஒரு சூழலிலும், பல நல்ல வாய்ப்புகள் குவிந்த போதிலும் தமிழ் சினிமாவே எந்தன் உயிர் மூச்சு என தமிழ் திரையுலகத்தை தாண்டி செல்லாதவர் நடிகர் விஜயகாந்த்.
நடிகர் விஜயகாந்த் அறிமுகமான 'இனிக்கும் இளமை' திரைப்படம் முதல், அவரின் 156வது படமான 'தமிழன் என்று சொல்' படம் வரை தமிழ் சினிமா நடிகனாக மட்டுமே வாழ்ந்த லட்சிய நடிகர் கேப்டன் விஜயகாந்த்.