கேப்டன் மில்லர் படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அப்டேட் கொடுத்து தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மோகன் இப்படத்தில் நாயகியாக நடிக்க, ஜான் கொக்கன், சிவராஜ் குமார், நிவேதிதா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
தன் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடும் நாயகனை மையப்படுத்தியும், போர் சூழலை சார்ந்தும் இப்படம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 28 படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்தின் நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராக தங்கள் பகுதி காட்சிகளை முடித்து வரும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசைக்கோர்ப்புப் பணிகள் பற்றிய கலக்கலான அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்துள்ள பதிவில், "தழும்புகள் வருவதற்கு முன்பே நான் ஆயுதத்தை சுவைத்துவிட்டேன். என் பெயரைக் கேட்டால் பயப்படக் கற்றுக்கொள்வாய், உன் கண்கள் அதைப் பார்க்காது.
நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்
நீ படையா வந்தா சவ மழ குவியும்
கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்” எனும் பாடல் வரிகளைப் பகிர்ந்துள்ளார்.
சுயாதீன இசைக்கலைஞரும் பாடலாசிரியருமான கேபர் வாசுகி இந்த வரிகளை எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், இசைக்கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கேப்டன் மில்லர் படம் ப்ரீ பிஸ்னஸிலேயே பல கோடிகளைக் குவித்து கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை எகிறவைத்து வரும் ஜி.வியின் இந்த அப்டேட் தனுஷ் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.