கனடாவை சேர்ந்த செயின்ட் வான் குலோசி (Saint Von Colucci) என்ற நடிகர், பி.டி.எஸ் கலைஞர் ஜிமினின் பெரிய ரசிகராக இருந்துள்ளார். ஜிமினைப்போல மாற வேண்டும் என ஆசைப்பட்டு பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு பரிதாமாக உயிரிழந்துள்ளார்.
கனடா நடிகர்:
கனடாவில் உள்ள க்யூபெக் என்ற நகரில் வசித்து வந்த 22 வயது இளம் நடிகர், செயின்ட் வான் குலோசி. 2015 ஆம் ஆண்டு திரைத்துறையில் விளம்பர மாடலாக அறிமுகமாகியுள்ளார். நடிகராக வேண்டும் என்ற ஆசையால் கடந்த 2019ஆம் ஆண்டு கனடாவில் இருந்து தென் கொரியாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். தென் கெரியாவிற்கு வந்த பிறகு, சில பாடல்கள் எழுதியுள்ளார். இசைக்கலைஞர் ஆகும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். பிரபல தென்கொரிய இசைக்குழுவான பி.டி.எஸ் குழுவின் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர், அந்த குழுவின் முக்கிய நபரான ஜிமினின் ரசிகராக இருந்துள்ளார். அதுவே, அவரது உயிரிழப்புக்கும் காரணமாகியுள்ளது.
உயிரிழந்த பரிதாபம்!
ஜிமினின் பெரிய ரசிகரான செயின்ட் வான் குலோசி, அவரைப் போலவே மாற வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர் முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை, மூக்கிற்கான அறுவை சிகிச்சை, உதட்டில் உள்ள தசையை குறைக்கும் சிகிச்சை, கண்களுக்கான சிகிச்சை என மொத்தம் 12 முகமாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார். இதனால், அவர் இதுவரை இரண்டு லட்சத்து 20 ஆயிரம் டாலர்கள் வரை செலவு செய்துள்ளதாக அவரது உதவியாளர் கூறியுள்ளார்.
இத்தனை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதால், சில மாதங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு பிரச்சனைகளால் செயின்ட் வான் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மாற்று அறுவை சிகிச்சைக்காக செயின் வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சிகிச்சைக்கு பிறகு, அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, சில மணிநேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.
இத்தனை அறுவை சிகிச்சைக்கு காரணம் என்ன?
இப்படி பரிதாபமாக உயிரிழந்துள்ள இந்த இளைஞர் எப்படி இருந்தார் என்பது குறித்து அவரது உதவியாளர் ஊடகத்திடம் கூறியுள்ளார். அந்த நடிகருக்கு பொன்னிறத்தில் முடி இருந்ததாகவும் அவரது கண்கள் நீல நிறத்தில் இருந்ததாகவும் அவர் 6 அடி வரை உயரத்துடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாடை மாற்று அறுவை சிகிச்சையால்தான் இப்போது அந்த நடிகர் உயிரிழந்துள்ளார். ஆனால், அந்த சிகிச்சையில் இருக்கப்போகும் ஆபத்துகள் குறித்தும் அவருக்கு முன்னரே தெரிந்திருந்துதான் அதற்கு ஒப்புக்கொண்டாராம். இருப்பினும் அவரது தோற்றம் குறித்து அவருக்கு தாழ்வு மனப்பான்மை இருந்ததால் ஜிமின் போல மாற வேண்டும் என்று அவர் முடிவெடுத்தாராம்.
அது மட்டுமன்றி, தென் கொரியாவிற்கு நடிகர் வந்த புதிதில் அவருக்கு வேலை கிடைக்கவில்லையாம். இந்த நாட்டில் அனைவரும் ஆசியாவை சேர்ந்தவர்களாக இருப்பதாலும், இவர் அவர்களைப் போல இல்லாததால் அவரை பிறர் பாரபட்சத்துடன் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.
விரைவில் வெளிவர இருக்கும் நடிகரின் தொடர்:
கொரிய நடிகர்கள் பலர் நடித்துள்ள ப்ரிட்டி லைஸ் என்ற தொடரில், செயின்ட் குலோசி நடித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் சில கூறியுள்ளன. அந்த தொடரில், ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இவர் வெளிநாட்டு மாணவராக வருகிறாராம். இந்த தொடர் வரும் அக்டோபர் மாதத்தில் வெளிவர உள்ளது.