போக்குவரத்து வீதிகளை மீறியதாக கூறி நடிகர் விஜய்க்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 


 






 


தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய். தமிழகம் முழுவதும் இவருக்கு  ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், அவர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் நற்பணிகளைச் செய்து வருகின்றனர். அரசியலிலும் ஆர்வம் காட்டி வரும் நடிகர் விஜய், தனது இயக்க நிர்வாகிகளை அரசியலில் ஈடுபட பச்சைக்கொடி காட்டினார். அந்த வகையில், கடந்த சில தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். 


 


அவ்வப்போது ரசிகர்களை சந்தித்து வந்த விஜய், அண்மை காலமாக அவர்களுடனான சந்திப்பை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி விஜய் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது ரசிகர்களை  சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த சந்திப்பின் போது, அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்ட அவர், அவர்களுக்கு பிரியாணி விருந்தும் அளித்தார். தொடர்ந்து அவர்களுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டார். 






வெள்ளை நிற சட்டையில், கருப்பு காரில் வந்திருந்த விஜயை பார்த்து, அங்கு கூடியிருந்த விஜய் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனிடையே அவர் வந்திருந்த காரில், உள்ளிருப்பவர்கள் வெளியே தெரியாமல் இருப்பதற்காக, கருப்பு ஸ்டிக்கர்  ஒட்டப்பட்டு இருந்தது. 


இதனை காரணம் காட்டியுள்ள சென்னை போக்குவரத்து காவல்துறை, போக்குவரத்து விதிகளின் படி, காரில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அதை விஜய் எவ்வாறு பயன்படுத்தலாம், அப்படி பார்க்கும் போது விஜய் போக்குவரத்து விதிகளை மீறியிருக்கிறார் என்று கூறி, அவருக்கு 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.