இந்தியில் வெளியாகவுள்ள விக்ரம் வேதா படத்தை புறக்கணிக்க கூறி ட்விட்டரில் ஹேஸ்டேக் ஒன்று ட்ரெண்டாகி வருவது பாலிவுட் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 






கடந்த  2017ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் 'விக்ரம் வேதா’.  இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்திருந்தார். வித்தியாசமான திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்த இப்படம் இந்தியில் நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடிப்பில் அதே பெயரில் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது.  


தமிழில் இந்த படத்தை தயாரித்த YNOT Studiosவுடன் இணைந்து Plan C Studios மற்றும் Reliance Entertainment, T-Series Films நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளது. மேலும் விக்ரம் வேதா வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அன்றைய தினம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிற்குரிய பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 






இந்நிலையில் பாலிவுட் படமான விக்ரம் வேதாவை புறக்கணிக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு காரணமாக சைஃப் அலி கானின் பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் தனது மகனுக்கு தைமூர் என பெயரிப்பட்டுள்ளது பற்றி சைஃப் அலிகானும், கரீனா கபூரும் பெருமையாக பேசுவது போல காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் ஏற்கனவே அருமையான இதன் ஒரிஜினல் படத்தை பார்த்து விட்டு ஏன் மீண்டும் இதனை பார்த்து பணத்தை வீணடிக்கிறீர்கள்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளனர். 






ஏற்கனவே பாலிவுட்டில் படங்கள் தரமானதாக இல்லை என்று கூறி லால் சிங் சத்தா, பிரம்மாஸ்திரா, ரக்‌ஷாபந்தன் ஆகிய படங்களை புறக்கணிக்ககோரி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். அப்போது லால் சிங் சத்தாவை பாராட்டி நடிகர் ஹிருத்திக் ரோஷன் கருத்து தெரிவிக்க, உடனடியாக #BoycottVikramVedha என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது. இந்த பிரச்சனை இன்னும் 2 நாட்களில் படம் வெளியாகும் நிலையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால் விக்ரம் வேதா திட்டமிட்டபடி வெற்றி பெறுமா என்னும் கேள்வி  படக்குழுவினரிடம் எழுந்துள்ளது.