பாஸ்கி.. என்றவுடன் அவருடைய பளிச் ஷார்ப் காமெடிகள் தான் நினைவுக்கு வரும். பத்திரிகைகளில் ஜோக்ஸ் என ஆரம்பித்து,  திரைப்பட நடிகர், ரேடியோ ஒலிப்பதிவாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார்.


நகைச்சுவை நிகழ்சிகளுக்கு  இவர் பிரபலமானவர். நகைச்சுவை டிராமாக்கள் பல எழுதி இயக்கியுள்ளார். தன் வாழ்க்கையில் தன்னை ஊக்குவித்து முன்மாதிரியாக இருந்து வளர்த்துவிட்ட திரைப்பிரபலங்கள் பற்றியும் தனது மேடை அனுபவங்கள் பற்றியும் பாஸ்கி ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.
அவருடைய பேட்டியிலிருந்து..


"எனக்கு 20 உனக்கு 18 திரைப்பட ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் தான் நான் முதன்முதலில் ஏஆர்.ரஹ்மானை நான் முதன்முறையாகப் பார்த்தேன். அவர் அவ்வளவு எளிமையான நபர். நான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவிட்டு அவர் அருகே சென்று பாடல்கள் எல்லாம் பிரமாதம் சார் என்றேன். உடனே அவர் மெதுவாக நல்லா இருந்ததா என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு பெரிய ஆள் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என நினைத்தேன். அதுபோல் ரஜினி சாரை ஒரு முறை மேடையில் நேருக்கு நேர் சந்தித்தேன். பாபா பட விழாவை தொகுத்து வழங்கினேன். ரஜினி சாரை அழைக்கும்போது எல்லோரும் பேசி முடித்த பின்னரே கைதட்டு வரும்... இவரை பேசக் கூப்பிட்டாலே கைதட்டு வரும் என்று ரஜினி சாரை பேச அழைத்தேன். அவர் பேசிவிட்டு செல்லும்போது என் அருகில் வந்து நல்லா தொகுத்து வழங்குறீங்க என்று சொல்லிச் சென்றார்.


அதுபோல் கமல்ஹாசனை ஒரு மேடையில் சந்தித்தேன். அதுவும் ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளராகத் தான். என் பாணியில் நிறைய காமெடிகளை அவிழ்த்துவிட்டேன். ஆனால் கமல் சார் உம்மென்றே இருந்தார். அப்போது நான் கமல் சாரைப் பற்றி பேசும்போது ஏன் கமல் சாருக்கு ஆஸ்கர் வரவில்லை என்று பேசுகிறீர்கள்? ஆஸ்கர் ஏன் கமல் சாரை தேடி வரவில்லைன்னு பேசுங்க என்றேன். மனுஷன் குஷியாகிட்டார்.


கிரேஸி மோகன் சார் பற்றி பேசியே ஆக வேண்டும். அவர் அவ்வளவு பெரிய ஜீனியஸ். ஆனால் என் எழுத்துகளை அப்படி ஊக்குவிப்பார், பாராட்டுவார், ரசிப்பார். என்னைப் பார்க்கும் போதெல்லாம் பாஸ்கி நாடகம் எழுது நாடகம் எழுதுன்னு சொல்லிட்டே இருப்பார். என்னை டார்ச்சர் செய்வார். அன்புத் தொல்லை. அதனால் தான் நான் இன்று 10 நாடகங்கள் எழுதியுள்ளேன்.


விசு சாரும் அப்படித்தான் எனது ஜோக்ஸ் படிச்சிட்டு ஃபோன் பண்ணுவார். என்னைப் பார்த்து மனமார பாராட்டுவார். அவ்வப்போது ஆலோசனைகள் சொல்வார்.


வெண்ணிறாடை மூர்த்தி சார், டெல்லி கணேஷ் சார் எல்லாம் எனக்கு உயிர். அவுங்க காமெடி எல்லாம் அடிச்சுக்க முடியாது. நீலுவோட காமெடியும் அப்படித்தான். அது ஒரு தனி ரகம்.


மெளலி இருக்காறே அவர் ஒரு காமெடி ஜாம்பவான். என்னை நிறைய பாராட்டி இருக்கிறார். நிறைய கரெக்‌ஷன் சொல்வார். வெளிப்படையாக பேசுவார். ஏதாவது நன்றாக இல்லை என்றால் அதை தவிர்த்திருக்கலாம் என்றே சொல்வார். இன்று நான் எழுத்து, சினிமா என்றெல்லாம் நிலைத்து நிற்க இவர்களைப் போன்ற மென்ட்டார்கள் தான் காரணம்” இவ்வாறு பாஸ்கி கூறியுள்ளார்.