சென்னை அண்ணா சாலையில் உள்ள கேசினோ திரையரங்கில், Spider-Man: Brand New Dayதிரைப்படத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்த ரசிகர்கள் கடும் அதிருப்தியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் முன்பதிவு செய்த காட்சிக்கு பதிலாக ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்குமாறு கூறப்பட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட ரசிகர்கள் கூறுகையில், ஆன்லைனில் காலை 11.30 மணி (AM) Spider-Man: Brand New Day 3Dகாட்சிக்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்ததாக தெரிவித்தனர். BookMyShowமற்றும் தியேட்டரின் டிக்கெட் தளத்திலும் அதே நேரமே காட்டப்பட்டதாகவும் கூறினர். ஆனால், டிக்கெட் உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அது இரவு 11.30 மணி (PM) காட்சியாக மாற்றப்பட்டிருந்ததாக புகார் தெரிவித்தனர்.
இந்த மாற்றம் குறித்து விளக்கம் கேட்க தியேட்டருக்கு வந்தபோது, முன்பதிவு செய்யப்பட்ட காட்சிக்கு பதிலாக ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்குமாறு கூறியதாக ரசிகர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், ஜனநாயகன் திரைப்படம் 'A' சான்றிதழ் பெற்றிருப்பதால், மாணவர்கள் உள்ளிட்ட சிலரை உள்ளே அனுமதிக்க முடியாது என்றும் தியேட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அவர்கள் கூறினர்.
இதனால், காலை முதலே வந்திருந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர் வளாகத்தில் திரண்டு, பணத்தை திருப்பித் தர வேண்டும் என்று வலியுறுத்தினர். உடனடியாக பணத்தை திருப்பி வழங்காமல், இரண்டு நாட்களுக்குப் பிறகு ரீஃபண்ட் வழங்கப்படும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டதாகவும், அதற்கான எழுத்துப்பூர்வ உறுதிமொழி அல்லது ஆதாரம் எதுவும் வழங்கப்படவில்லை என்றும் ரசிகர்கள் குற்றம்சாட்டினர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து பேச தியேட்டர் நிர்வாகத்திலிருந்து எந்த மேலாளரும் நேரில் வரவில்லை என்றும், ஊழியர்கள் மட்டுமே பதிலளித்ததாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். பலர் வெவ்வேறு பகுதிகளில் இருந்து நீண்ட தூரம் பயணம் செய்து வந்த நிலையில், திடீரென காட்சி நேரம் மாற்றப்பட்டதாலும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாததாலும் கடும் ஏமாற்றம் ஏற்பட்டதாக கூறினர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், டிக்கெட் முன்பதிவு நடைமுறை மற்றும் தியேட்டர் நிர்வாகத்தின் செயல்பாடு குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து கேசினோ திரையரங்கம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை.
