ரவீனா டாண்டன்
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ரவீனா டாண்டன். தமிழில் கமல்ஹாசன் நடித்த ஆளவந்தான் படத்தில் நடித்திருந்தார். சில காலம் திரைப்படங்களில் இருந்து விலகியிருந்த ரவீனா கன்னடத்தில் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் படத்தில் ரமீகா சிங் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டினார்.
இதனைத் தொடர்ந்து தற்போது அவர் நடித்துள்ள வெப் சீரிஸ் ’கர்மா காலிங்’ டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. ரவீனா டாண்டன், நம்ரதா ஷெத், வருண் சூட், வாலுசா டி சௌசா உள்ளிட்டவர்கள் இந்த தொடரில் நடித்துள்ளார்கள். இந்த வெப் சீரிஸின் ப்ரோமோஷன்களின் போது நடிகை ரவீனா பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அப்போது நடிகர் ஷாருக் கான் பற்றி அவர் பேசியுள்ளார்.
நான்கு முறை கைவிட்டுப் போன வாய்ப்புகள்
ஷாருக் கான் உடன் இணைந்து தான் நான்கு படங்களில் நடிக்க இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்தப் படங்கள் கைவிட்டுப் போயின என்றும் அவர் கூறினார். இருவரும் நடிக்க இருந்த ஒரு படத்தின் இயக்குநர் இறந்துவிட்டதால் அந்த படம் நின்றுபோனது. மேலும் இன்னொரு படத்தில் தனக்கு கொடுக்கப் பட்ட காஸ்டியூம் பிடிக்காததால் அந்தப் படத்தில் இருந்து தான் விலகியதாக அவர் தெரிவித்தார். இன்னும் இரண்டு படங்கள் குறித்த தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை. ஷாருக் கானுடன் இணைந்து ஜவானா தீவானா எனும் படத்தில் நடித்தார் ரவீனா, ஆனால் இந்தப் படத்தில் ரிலீஸ் மிக நீண்ட நாட்களுக்கு ஒத்திப்போனது.
ஷாருக் கானின் குணம் பற்றி பேசும்போது ஷாருக் கான் மிகவும் அன்பும் அக்கறையும் உள்ள ஒரு மனிதர் என்று அவர் தெரிவித்தார் . மேலும் ஷாருக் கான் நடித்த ’குச் குச் ஹோத்தா ஹேய்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவானால் அதில் தான் நடிக்க தயார் என்று ரவீனா டாண்டன் தெரிவித்தார்.
தற்போது தான் நடித்துள்ள கர்மா காலிங் இணையத் தொடரின் கதை தனக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டதாகவும், இந்தத் தொடரில் நடிக்க நிறைய ஸ்டார்களின் கால்ஷீட் தேவைப்பட்டதாலும் தனது மகன் வெறும் நான்கு வயதை எட்டியிருந்ததால் இதில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறினார். ஆனால் விதி 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தக் கதையை மீண்டும் அவரிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. ”கர்மாதான் எங்களை இணைந்திருக்கிறது” என்று ரவீனா கூறினார்.