பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் வித்யுத் ஜம்வால். தமிழில் இவர் வில்லனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் நடித்து வருகிறார். கட்டுக்கோப்பான உடல், அசாத்தியமான சண்டைக் காட்சிகள் காரணமாக இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
அஜித்துடன் நடிக்க ஆசை:
தமிழில் பில்லா 2 படம் மூலமாக வில்லனாக அறிமுகமானார். பின்னர், துப்பாக்கியில் விஜய்க்கு வில்லனாக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார். பின்னர். அஞ்சானில் நடித்தார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மதராஸியில் மீண்டும் வில்லனாக நடித்து அசத்தியுள்ளார்.
இந்த சூழலில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய வித்யுத் ஜம்வாலிடம், தமிழில் உங்களுக்கு யாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று ஆசை? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் கூறிய வித்யுத் ஜம்வால், என்னுடைய மதிப்பிற்குரிய அஜித் சாருடன் இணைந்து நான் மீண்டும் பணியாற்ற விரும்புகிறேன். நான் ஒரு முன்னணி நடிகராக வருவதற்கு முன்பு, பில்லா படத்தின்போது அஜித் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். மற்றொன்றும் சொல்ல வேண்டும் அவர் அருமையான மனிதர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பில்லா 2:
அஜித் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான படம் பில்லா 2. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகிய இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனாக வித்யுத் ஜம்வால் தமிழில் அறிமுகமானார். பில்லா படத்தின் முந்தைய பாகமாக இந்த படத்தை படத்தின் இயக்குனர் சக்ரி டோலட்டி உருவாக்கியிருப்பார்.
வித்யுத் ஜம்வால் டிமித்ரி என்ற சர்வதேச ஆயுத கடத்தல்வாதியாக இந்த படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தின்போது அஜித்திற்கும், வித்யுத் ஜம்வாலுக்கும் இடையே நல்லுறவு ஏற்பட்டது. தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களே அவருக்கு வந்து கொண்டிருந்த நிலையில், கமாண்டோ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் தொடர்ந்து கமாண்டோ 2, ஜங்லி, யாரா என பல படங்களில் நடித்தார்.
தற்போது ஹாலிவுட்டில் ஸ்ட்ரீட் ஃபைட் என்ற படத்தில் நடித்து வருகிறார். சரியான கதையம்சம் அமைந்தால் தமிழில் தொடர்ந்து நடிக்க உள்ளார்.