உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்க நடிகை சன்னி லியோனுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. 

Continues below advertisement

2025ம் ஆண்டு நிறைவுக்கு வந்துள்ளது. 2026ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க நாம் அனைவருமே மிகுந்த ஆர்வமோடு காத்திருக்கிறோம். இந்த புது ஆண்டு அனைவரின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத காலமாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் சினிமா, சின்னத்திரை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் நடைபெறும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகை சன்னி லியோன் பங்கேற்கிறார். புராணத்தின்படி மதுரா கிருஷ்ண பகவான் பிறந்த இடமாகும். இது இந்தியாவின் புனிதமான ஏழு நகரங்களில் ஒன்றாகும். இங்கு தான் கிருஷ்ணரின் ஜென்ம பூமி கோயில் அமைந்துள்ளது. 

Continues below advertisement

இந்த நிலையில் மதுராவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் புத்தாண்டு கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான அத்தனை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தது. ஆனால் சன்னி லியோன் பங்கேற்க மதுராவில் உள்ள துறவிகள் மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடையே முறையிட்டனர். இதனால் பின்விளைவுகளை தவிர்க்க சன்னி லியோன் அழைப்பை கைவிட்டுள்ளனர். நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 

இதுதொடர்பாக ஹோட்டல் நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ள தகவலின்படி, “இந்த நிகழ்வு வேறு எந்த வகையிலும் திட்டமிடப்படவில்லை. இது ஒரு DJ நிகழ்ச்சியாக திட்டமிடப்பட்டது. இதற்காக சட்ட விதிமுறைகள் முறைப்படி பின்பற்றப்பட்டுள்ளது. எனினும் சமூக மற்றும் மத உணர்வுகளை கருத்தில் கொண்டு இந்த நிகழ்ச்சியை ரத்து செய்திருக்கிறோம். இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக 300 பேர் கொண்ட டிஜே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பங்கேற்பாளர்களுக்கு நுழைவுச் சீட்டுடன் கூடிய குடில், மாடி இருக்கை, ஜோடியாக நிற்க இடம் என பல வகைகளில் கொண்டாட்டம் இடம் பிரிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிகழ்ச்சியானது டிசம்பர் 31ம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி நள்ளிரவு வரை இருக்கும்படி திட்டமிடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் பிறகு இதற்கு எதிர்ப்பு அதிகரித்தது.  இது மத துறவிகள் மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்களிடையே கோபத்தைத் தூண்டியது. நிகழ்ச்சியை ரத்து செய்யக்கோரி மாவட்ட நீதிபதிக்கு பலர் கடிதம் எழுதினர்.

அதில் மதுரா போன்ற மதம் சார்ந்த நகரத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் பொருத்தமற்றவை என்றும், ஏற்பாட்டாளர்கள் ஆபாசத்தை ஊக்குவிப்பதாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். இதனையடுத்து மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.