பாலிவுட் திரையுலகமான இந்தி திரையுலகின் பிரபல நடிகர் சைஃப் அலிகான். இந்தி திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகர் இவர். சமீபத்தில் தெலுங்கில் வெளியான தேவாரா படத்தில் வில்லனாக நடித்திருப்பார். 

இவர் மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில், மும்பையில் உள்ள இவரது வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர் இவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனால், சைஃப் அலிகானுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகையே அதிரவைத்துள்ளது.  சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து:

மும்பை பாந்த்ராவில் சைஃப் அலிகானின் வீடு உள்ளது. பல பாதுகாப்பு அம்சங்களுடனே அவரது வீடு உள்ளது. ஆனாலும், அவரது வீட்டின் உள்ளே நேற்று இரவு கொள்ளையர் ஒருவர் உள்ளே புகுந்துள்ளார். அப்போது சைஃப் அலிகான் வீட்டில் இருந்துள்ளார். 

தனது வீட்டின் உள்ளே நுழைந்த கொள்ளையரை சைஃப் அலிகான் பார்த்துள்ளார். அப்போது, இந்த கொள்ளை முயற்சியை அவர் தடுக்க முற்பட்டபோது இந்த கத்திக்குத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 2.30 மணியளவு இந்த கத்திக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. சைஃப் அலிகானை கத்தியால் குத்திய பிறகு கொள்ளையன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிர்ச்சியில் பாலிவுட்:

இந்த சம்பவம் தொடர்பாக மும்பை போலீசார் கூறும்போது, கத்தியால் குத்திய கொள்ளையன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறினர். மேலும், இந்த கொள்ளை முயற்சியின்போது சைஃப் அலிகான் பல முறை கத்திக்குத்துக்கு ஆளாகியுள்ளார். இதில் அவர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தால் பாலிவுட் திரையுலகம் முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. காயம் அடைந்த சைஃப் அலிகானை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று நலம் விசாரித்து வருகின்றனர். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  தற்போதைய நிலவரம் என்ன?

இந்த சம்பவம் எப்படி நடந்தது? கொள்ளையர் தனி ஆளாக உள்ளே வந்தாரா? அல்லது கும்பலாக உள்ளே வந்தனரா? இது கொள்ளை முயற்சியா? அல்லது சைஃப் அலிகான் மீதான கொலை முயற்சியா? என்று பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  54 வயதான சைஃப் அலி கான் நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இவரது மனைவி கரினா கபூரும் பிரபல பாலிவுட் நடிகை ஆவார். சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகானும் பிரபல பாலிவுட் நடிகை ஆவார். 

சைஃப் அலிகானை மொத்தம் 6 முறை கத்தியால் குத்தியுள்ளதாகவும், அதில் 2 குத்து மிக ஆழமாக ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பிரபல மருத்துவர்கள் அவருக்கு தற்போது சிகிச்சை அளித்து வருகின்றனர்.