சென்ற ஜன.25ஆம் தேதி வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களைக் குவித்து பேசுபொருளாகியுள்ள திரைப்படம் “ப்ளூ ஸ்டார்”.
இயக்குநர் பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் - லெமன் லீஃப் க்ரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில், அசோக் செல்வன், சாந்தனு, ப்ரித்வி பாண்டியராஜன், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். எஸ்.ஜெயக்குமார் இயக்கியுள்ளார்.
கிரிக்கெட், சாதி அரசியல் ஆகியவற்றை பேசும் வகையில் 90களின் அரக்கோணம் பகுதியை மையப்படுத்தி இப்படத்தின் கதை அமைந்துள்ள நிலையில், சாதிய படிநிலை, சமூகத்துக்கு தேவையான அரசியல் ஆகியவற்றை இப்படம் பேசியுள்ளதாக பாசிட்டிவ் விமர்சனங்கள் இப்படத்துக்கு கிடைத்து வருகின்றன.
மேலும் இப்படம் இதுவரை மொத்தம் 5.16 கோடிகளை தோராயமாக வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் நடைபெற்ற நிலையில், பல ஆண்டுகள் கழித்து தாங்கள் வெற்றியை சுவைத்துள்ளதாக நடிகர்கள் சாந்தனு, பிருத்வி ராஜன் ஆகியோர் மேடையிலேயே கலங்கினர்.ஒரு வாரம் கடந்தும் இப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்நிலையில், ப்ளூ ஸ்டார் பட ஷூட்டிங் தளத்தில் அசோக் செல்வன், சாந்தனு இருவரும் நடிகர் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடலுக்கு வைப் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், நடிகைகள் பூமிகா, மோனல் நடிப்பில் 2001ஆம் ஆண்டு வெளியான பத்ரி படத்தில் இடம்பெற்ற ‘என்னோட லைலா’ பாடல் நடிகர் விஜய்யின் எவர் க்ரீன் பாடல்களில் ஒன்று. விஜய் பாடிய இந்தப் பாடல் இன்றும் பார்க்கவும் கேட்கவும் புத்துணர்ச்சியாக இருக்கும். இந்நிலையில் ப்ளூ ஸ்டார் தளத்தில் சாந்தனு கொரியோகிராஃபராக மாறி அசோக் செல்வனை என்னோட லைலா பாடலுக்கு ஆட வைக்கும் வகையில் வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவை நடிகர் சாந்தனு தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில் நெட்டிசன்கள் இதயங்களைப் பறக்க விட்டு வருகின்றனர்.
நடிகர் விஜய்யின் அதி தீவிர ரசிகரான சாந்தனு முன்னதாக நடிகர் விஜய்யுடன் இணைந்து லோகேஷ் கனராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவருக்கு குறைவான திரை நேரமே ஒதுக்கப்பட்ட நிலையில், படம் பார்த்து சாந்தனு அப்செட்டானதாகத் தகவல்கள் வெளியாகின.
எனினும் தொடர்ந்து விஜய் மீதான அன்பை சாந்தனு வெளிப்படுத்தி வருவது இருவரது ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்று வருகிறது.