ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றிவிழாவில் நடிகர் ப்ரித்வி பேசியது ரசிகர்களின் மனதை நெகிழ வைத்துள்ளது.


ப்ளூ ஸ்டார்


அறிமுக இயக்குநர் ஜெய்குமார் இயக்கத்தில் உருவானப் படம் ப்ளூ ஸ்டார். கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியானது. அசோக் செல்வன், சாந்தனு , கீர்த்தி பாண்டியன், ப்ரித்வி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்து பா.ரஞ்சித் இந்தப் படத்தை வழங்கியுள்ளார். கிரிக்கெட்டை மையமாக வைத்து சாதிய பாகுபாட்டை பேசிய ப்ளூ ஸ்டார் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இப்படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  நடிகர் பாண்டியராஜனின் மகனான ப்ரித்வி பேசியது ரசிகர்களை கவர்ந்துள்ளது


நமக்கு ஒரு அடையாளம் இல்லையே




ப்ளூ ஸ்டார் படத்தில் நடிகர் பாண்டியராஜின் மகனான நடிகர் ப்ரித்வி ,  சாம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுவதும் காதல் கவிதைகளை சொல்லும் இந்த கதாபாத்திரம் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளது. சமூக வலைதளங்களில் கவிஞர் சாம் கவிதைகள் என்று ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். ப்ளூ ஸ்டார் வெற்றிவிழாவில் பேசிய நடிகர் ப்ரித்வி, “மெட்ராஸ் படத்தில் இருந்தே பா ரஞ்சித் படங்கள் எனக்கு பிடிக்கும். அவருடைய படத்தில் நடிக்க ஆசைப்பட்டிருக்கிறேன். இப்போது அவரது தயாரிப்பில் நடித்திருக்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இந்தப் படத்தில் நான் பேசும் கவிதைகள் எல்லாம் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதற்கெல்லாம் காரணம் இயக்குநர் ஜெய்குமாரும் எழுத்தாளர் தமிழ் பிரபாவும்தான். அவர்கள் தான் இந்த கவிதைகளை எழுதினார்கள். இந்த மாதிரியான திரைப்பட வெற்றி விழாக்கள் நான் நிறைய பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது நானே அப்படியான ஒரு விழாவில் நிற்கிறேன். நிறைய இடங்களுக்கு போகும்போது என்னை பாண்டியராஜனின் மகன் என்று கூப்பிடுவார்கள். அப்படி கூப்பிடும்போது எனக்கு சந்தோஷமாக இருந்தாலும் எனக்கு வருத்தமாக இருக்கும் நமக்கென்று ஒரு அடையாளம் இல்லையே என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இந்தப் படத்திற்கு பிறகு நிறைய பேர் என்னை சாம் என்றுதான் அழைக்கிறார்கள். எனது நிஜப்பெயரை அப்புறமாக தான் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்கள். இப்போது எனக்கென்று ஒரு அடையாளம் கிடைத்திருக்கிறது. ரொம்ப மகிழ்ச்சியாக உணர்கிறேன்.” என்று அவர் பேசினார்


வெற்றி கிடைக்காத ஏக்கம் இருந்துச்சு




அதே போல் ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி நடிகர் சாந்தனுவுக்கு ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்திருக்கிறது. நிறைய படங்களில் நடித்திருந்தாலும் நடிகர் சாந்தனுவுக்கு குறிப்பிட்டு சொல்லும் வகையிலான வெற்றிப் படங்கள் அமையவில்லை. இதுபற்றி பேசி அவர் “எனக்கு வெற்றி கிடைக்காத ஏக்கம் என்னுடைய அப்பா அம்மாவுக்கு இருந்தது. ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி அவர்களின் முகத்தில் ஒரு சிரிப்பை கொண்டு வந்திருக்கிறது. எனக்கு இதைவிட பெரிய பரிசு எதுவும் இல்லை” என்று சாந்தனு உருக்கமாக பேசினார்.