இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அமெரிக்க நடிகர் சேட்விக் பாஸ்மேனின் ஹீரோவாக நடித்த திரைப்படம் ப்ளாக் பேந்தர். இத்திரைப்படத்தின் இன்னொரு பாகமான ப்ளாக் பேந்தர்-வகாண்டா ஃபாரெவர் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது.
ப்ளாக் பாந்தர்:
மார்வெல் ஸ்டுடியோஸின் தயாரிப்பில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் ப்ளாக் பேந்தர். கேப்டன் அமெரிக்கா, ஸ்பைடர்மேன் போல சூப்பர் ஹீரோ திரைப்படமான இது, மார்வெல் ரசிகர்கள் மட்டுமன்றி, அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக, கருப்பின மக்களிடையே மாபெரும் ஆதரவு பெற்ற படங்களில் ப்ளாக் பேந்தர் திரைப்படம் முதல் வரிசையில் உள்ளதாக கூறப்படுகிறது. மார்வல் ஹீரோக்களில் முக்கியமான ஹீரோவாகவும் ப்ளாக் பாந்தர் கருத்தப்படுவதால், இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உண்டு. இதில் ஹீரோவாக நடித்திருந்த சாட்விக் பாஸ்மேன் ப்ளாக் பாந்தர் பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் சண்டை, சாகசம் என அனைத்து காட்சிகளிலும் வெளுத்து வாங்கினார். இதனால், பவர்ஃபுல் நடிகர்களுல் ஒருவராகவும் சாட்விக் கருதப்பட்டார். அவெஞ்சர்ஸ் படங்களின் வரிசையில் கடைசியாக வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தில் பிற சூப்பர் ஹீரோக்களுடன் சேர்ந்து இவர் சண்டையிடும் காட்சிகள் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. இப்படி புகழின் உச்சியில் இருந்த நடிகர் சாட்விக்-கிற்கு புற்று நோய் இருந்த விஷயம் பலருக்கு தெரியவில்லை. இதனால், கடந்த 2020ஆம் ஆண்டு சாட்விக் புற்று நோய் காரணமாக இறந்த செய்தியை கேட்டு பலரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
வகாண்டா ஃபாரெவர்:
சாட்விக் பாஸ்மேனை வைத்து ப்ளாக் பாந்தர் படத்தின் அடுத்த பாகமான வகாண்டா ஃபாரெவர் படத்தை எடுக்கலாம் என படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். இதனால், வகாண்டா ஃபாரெவர் படத்தின் படப்பிடிப்பு சிறிது நாட்கள் தள்ளிப்போனது. கடைசியாக, படத்தினை முடிக்க திட்டமிட்ட படக்குழு, தற்போது வகாண்டா ஃபாரெவர் படத்தின் ட்ரைய்லரை வெளியிட்டுள்ளது. இதில், லெட்டிட்டா ரைட் என்ற நடிகை சூப்பர் ஹீரோவாக காண்பிக்கப்பட்டுள்ளார். இதனால், வழக்கம் போல பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படம் ரசிகர்களை கண்டிப்பாக ஏமாற்றாது என்பது உறுதியாகியுள்ளது. படம் அடுத்த மாதல் 11ஆம் தேதி வெளியாகவுள்ளதால், மார்வெல் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர்.