தங்கம், வைரம், போதைப்பொருள் கடத்தல் எனப் பல்வேறு பின்னணிகளில் கிரைம் திரில்லர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில், கோயில்களில் காணிக்கையாகச் செலுத்தப்படும் தலைமுடியின் சர்வதேச வணிகத்தையும், அதன் பின்னால் இயங்கும் மாஃபியா கும்பல்களையும் மையமாக வைத்து வெளியாகியுள்ள திரைப்படம் ‘பிளாக் கோல்டு’.

Continues below advertisement

வெற்றி, லிவிங்ஸ்டன், பிரியாலயா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை தீரன் அருண்குமார் இயக்கியுள்ளார். எம்.எம். ஸ்டூடியோஸ் சார்பில் மூர்த்தி தயாரித்துள்ளார். கவாஸ்கர் அவினாஸ் இசையமைத்துள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் ஓடக்கூடிய இப்படம் ஆக்‌ஷன், கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.

கதை

தலைமுடி ஏற்றுமதி வணிகத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுகிறது. இந்தத் தொழிலில் ஆதிக்கம் செலுத்தும் குழுக்களுக்கு இடையே போட்டியும் மோதலும் நிலவுகின்றன. இந்தச் சூழலில், தலைமுடி வியாபாரம் செய்யும் தங்கதுரையிடம் (ஏ. வெங்கடேஷ்) ஓட்டுநராகப் பணியாற்றுகிறார் மாரிமுத்து (லிவிங்ஸ்டன்). அவரது மகன் செல்வா (வெற்றி) மெக்கானிக் கடை நடத்தி வருகிறார்.

Continues below advertisement

பல கோடி ரூபாய் மதிப்புள்ள தலைமுடி சரக்கை ஏற்றிச் செல்லும் லாரி திடீரென காணாமல் போகிறது. அதனை ஓட்டிச் சென்ற மாரிமுத்துவும் மாயமாகிறார். தந்தையைத் தேடி செல்வா களமிறங்குகிறார். இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன, தலைமுடி சரக்கைக் கடத்தியது யார், தந்தையை மீட்கச் செல்வா என்ன செய்கிறார் என்பதே மீதிக்கதை.

நடிப்பு

செல்வா கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெற்றி, அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், தந்தையுடன் இடம்பெறும் உணர்வுப்பூர்வமான காட்சிகளிலும் கவனம் பெறுகிறார். இருப்பினும், கதாநாயகனுக்கான வேகம் மற்றும் அழுத்தம் சில இடங்களில் குறைவாகவே இருக்கிறது.  பிரியாலயாவுடனான காதல் காட்சிகளும் கதையின் முக்கியமான பகுதியாக மாறவில்லை.

மாரிமுத்துவாக வரும் லிவிங்ஸ்டன் தனது அனுபவ நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். மகன் மீதான பாசம், முதலாளியிடம் காட்டும் விசுவாசம், கடத்தல் சம்பவத்தின்போது வெளிப்படுத்தும் நடிப்பு ஆகியவை படத்துக்குப் பலம் சேர்க்கின்றன. வில்லனாக வரும் அருள் டி. சங்கரின் கோபமும், சுருள்வாள் சண்டைக்காட்சியும் குறிப்பிடத்தக்கவை. கராத்தே வெங்கடேசன் மற்றும் அவரது குழுவினரின் வில்லத்தனமும் சில இடங்களில் படத்தின் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. ஏ. வெங்கடேஷ் வழக்கமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி வெங்கடாசலத்தின் கதாபாத்திரத்துக்கு இன்னும் வலுவான இடம் கொடுத்திருக்கலாம்.

படத்தின் பலம், பலவீனம்

படத்தின் முக்கியமான பலம் அதன் கதைக்களம். தலைமுடி ஏற்றுமதி வணிகம், அதன் சந்தை மதிப்பு, அதைச் சுற்றியுள்ள போட்டி மற்றும் குற்றச்செயல்கள் ஆகியவற்றைத் திரையில் கொண்டு வந்திருப்பது புதுமையான முயற்சி. லிவிங்ஸ்டனின் நடிப்பு, அருள் டி. சங்கரின் வில்லத்தனம், கவாஸ்கர் அவினாஸின் பின்னணி இசை மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கான ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்குச் சாதகமாக அமைகின்றன.

ஆனால், இந்தப் புதுமையான பின்னணியை இன்னும் ஆழமாக ஆராய்ந்திருக்கலாம். தலைமுடி வணிகத்தைப் பற்றிய தகவல்கள் முழுமையாக விரிவடையாமல், கதை வழக்கமான கேங்ஸ்டர் மோதல் மற்றும் பழிவாங்கும் பாதைக்குத் திரும்புகிறது. பல கதாபாத்திரங்களும், கிளைக்கதைகளும் இடம்பெற்றாலும் அவை அனைத்தும் ஒரே நேர்த்தியில் இணைவதில்லை. தொடக்கத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை, பின்னர் வேகம் எடுத்தாலும் கிரைம் திரில்லருக்குத் தேவையான பரபரப்பைத் தொடர்ந்து தக்கவைக்கவில்லை. சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள ஏ.ஐ. தொழில்நுட்பமும் படத்தின் இயல்பான தன்மையைக் குறைக்கிறது.

இதுவரை அதிகம் பேசப்படாத தலைமுடி வணிகத்தை மையமாகக் கொண்டிருப்பது ‘பிளாக் கோல்டு’ படத்தின் தனித்துவம். ஆனால், அந்தப் புதுமையான கதைக்களத்துக்கு ஏற்ற வலுவான திரைக்கதையும் விறுவிறுப்பும் அமைந்திருந்தால் இன்னும் சிறப்பான கிரைம் திரில்லராக உருவெடுத்திருக்கும். வித்தியாசமான கதைக்கருவை அறிமுகப்படுத்தும் முயற்சியாகத் தெரிந்தாலும், திரைக்கதையின் வேகக் குறைவு படத்தின் அனுபவத்தைச் சற்றே பாதிக்கிறது.