தவெக தலைவரும், நடிகருமான விஜய்யை தான் இன்னும் அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்ளவில்லை என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியில் நடைபெற்ற இண்டிகோ 2025 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கொம்பு சீவி படக்குழுவினரான நடிகர் சண்முக பாண்டியன், நடிகர் சரத்குமார், இயக்குநர் பொன்ராம் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அதாவது, “மாணவர்களுக்கு தேசப்பற்று இருப்பது போல, அரசியல் ஆர்வமும் இருக்க வேண்டும். இது ஜனநாயக நாடு. மாணவர்களும் மட்டுமல்ல எல்லாருக்கும் அந்த அரசியல் ஆர்வம் இருக்க வேண்டும். கட்சி மட்டும் புதிது புதிதாக ஆரம்பிக்க வேண்டும் என்பது முக்கியமில்லை. என்ன கொள்கை, கருத்து என்பது தான் முக்கியமான ஒன்றாகும்” என கூறினார்.
தொடர்ந்து, நடிகர் விஜய்க்கு நீங்கள் சொல்லக்கூடிய அறிவுரை என்ன? என கேட்கப்பட்டது. அதற்கு, “விஜய்க்கு நான் அறிவுரை சொல்ல முடியாது. அவர் வளர்ந்த நடிகர். நான் அவரை அரசியல்வாதியாக ஏற்றுக் கொள்ளவில்லை. விஜய் அரசியல் களத்திற்கு வந்துள்ளார். அவர் கட்சியின் கொள்கை என்ன, கோட்பாடு என்ன, அவர் என்ன செய்யப் போகிறார் என கேட்டால் சொல்வதற்கு பெரிய பிரஸ்மீட் தேவைப்படும்.
விஜய் நிறைய விஷயம் பேசிக்கொண்டே செல்கிறார். அவை சாதாரணமானவை கிடையாது. நாள் முழுக்க பேசும் அளவுக்கு விஜய் பல விஷயங்களை கூறியுள்ளார். மக்கள் சொந்தமாக வீடு வைத்திருக்கும் அளளவுக்கு பொருளாதார வசதியை உயர்த்துவேன் என கூறுகிறார். எப்படி முடியும் என நான் கேட்கிறேன். தமிழ்நாடு இன்றைக்கு 10 லட்சம் கோடி கடனில் இருந்து மீண்டும் எப்படி வருவார்கள் என்பதே தெரியவில்லை.
மேலும், விஜய்யின் நிலைப்பாடு என்ன என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். என்னிடம் கேட்டால் நான் சொல்ல மாட்டேன். அவருக்கு டிஆர்பி ஏற்றிவிட நான் பதில் சொல்ல மாட்டேன்” எனவும் சரத்குமார் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் எங்களுக்கு தான் சாதகமாக இருக்கும். பாஜகவில் என்னுடைய செயல்பாடு சிறப்பாக இருக்கிறது. ஜனவரி 5ம் தேதி நயினார் நாகேந்திரன் தலைமையில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ஒரு படம் தயாரானவுடன் நம்முடைய வேலை முடிந்து விட்டது என நினைக்காமல் அதனை பிரமோஷன் செய்ய வேண்டிய சூழல் அதிகமாகியிருக்கிறது எனவும் சரத்குமார் தெரிவித்துள்ளார். அவரின் அரசியல் கருத்து சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.