பாலிவுட்டின் பிரபல நடிகைகளுள் ஒருவரான பிபாஷா பாசு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரபல சின்னத்திரை நடிகர் கரண் சிங் க்ரூவரை பிபாஷா பாசு 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில் இத்தம்பதிக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.


2001ஆம் தொடங்கி பாலிவுட்டின் கிளாமர் குயினாக வலம் வரத் தொடங்கி பெரும் பிரபலமடைந்தார் பிபாஷா பாசு. 'அஜ்னபி' எனும் படத்தின் மூலம் அறிமுகமான இவர், ராஸ் படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தொடர்ந்து நடிகர் ஜான் ஆப்ரஹாம் உடன் பிபாஷா காதலில் விழுந்த நிலையில், சுமார் 9 ஆண்டுகள் வரை இவர்களது காதல் நீடித்தது.


விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போகிறார்கள் என ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களும் எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில், இருவரும் 2011ஆம் ஆண்டு ப்ரேக் அப் செய்தனர்.


 






தொடர்ந்து பாலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக வலம் வந்த பிபாஷா, 2016ஆம் ஆண்டு சின்னத்திரை டூ வெள்ளித்திரை எண்ட்ரி கொடுத்த நடிகர் கரண் சிங் க்ரோவருடன் படப்பிடிப்பின் போது காதலில் விழுந்தார்.


நடிகை ஜெனிஃபர் விங்கட் உடனான திருமண உறவை அப்போதுதான முறித்துக் கொண்டு வெளியேறி இருந்த கரணும் பிபாஷாவுடன் மீண்டும் காதலில் விழுந்த நிலையில், இருவரும் அந்த ஆண்டே திருமணம் செய்து கொண்டனர்.




தமிழ் ஆடியன்ஸ்களுக்கு விஜய் - ஜெனிலியா நடித்த சச்சின் படம் மூலம் பிபாஷா பரிச்சயமானார். 2004ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் பிபாஷாவின் தோற்றமும், துள்ளலான நடன அசைவுகளும் அனைவரையும் ஈர்த்தது.


முன்னதாக, பிபாஷாவும் கரணும் தாங்கள் பெற்றோராகவிருப்பதாக ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி அறிவித்தனர். இந்நிலையில், இவர்களுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. பாலிவுட் தொடங்கி நாடு முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கும் டஸ்கி ப்யூட்டி பிபாஷா பாசு - கரண் சிங் க்ரோவர் தம்பதிக்கு வாழ்த்துகள்!