சீரியல் சூப்பர் ஸ்டார், நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என நடிகர் சஞ்சீவுக்கு பல்வேறு முகங்கள் உண்டு. பிக்பாஸ் வீட்டுக்கு போன அனுபவங்களை பகிர்ந்த சஞ்சீவ்,






"வெளியில் இருந்து வந்ததும் எனக்கு காய்ச்சல்தான் வந்தது. உள்ளே ஆறு வாரம் இருந்துவிட்டு வெளியே வந்ததும் வீட்டில் வைத்த சாம்பார் வாசம் கூட ஒப்புக்கொள்ள முடியாத அளவுக்கு உடல்நிலை மோசமாகியிருந்தது. பிக்பாஸ் வீட்டில் இருந்தவரையில் நான் வெளியே நல்ல பெயர் எடுத்ததாக எனது நண்பர்கள் , மனைவி என எல்லோருமே ஒரே விஷயத்தைச் சொன்னார்கள். நாம் வெல்கிறோமோ இல்லையோ, இப்படி நல்லபெயர் எடுத்தது போதுமானதாக இருந்தது.உள்ளே போனதும் ரெண்டு நாள் எல்லோரையும் கவனிக்கலாம் அதன்பிறகு கேம் விளையாடலாம் என இருந்தேன். ஆனால் போன ஐந்தாவது நிமிடமே எனது மனநிலை மாறிவிட்டது.


ராஜூவுடன் மட்டும்தான் நான் நெருக்கமாக இருந்ததாக எல்லோரும் நினைத்தார்கள்.காரணம் நான் அண்ணாச்சியுடன் நெருக்கம், அண்ணாச்சி ராஜூவுக்கு நல்ல நண்பர் அதனால் நாங்கள் இருவரும் அப்படியே பேசிப் பழக ஆரம்பித்தோம். ஒருகட்டத்தில் என்னைப் பார்க்க வந்த என் மனைவி ப்ரீத்தி என்னுடைய காப்பை ராஜூவுக்கு மாட்டிவிட்டதும் நானே எதிர்பார்க்காமல் எமோஷனலாக இருந்தது.


நாங்கள் இருவருமே ஒரே மாதிரி யோசிப்பதாக ப்ரீத்தி என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் ப்ரீத்தி என்னை பார்ப்பதற்காக சர்ப்ரைஸாக காத்துக்கொண்டிருந்தாங்க. வீட்டுக்கு வந்தா மகள் லயா அப்பா என ஓடிவந்து கட்டிப்பிடித்தாள், அக்கா மகள் ஸ்ரேயா, அவளது பிள்ளை, அஸ்வின் என எனக்கு நெருக்கமானவர்கள் எல்லோரும் என்னை வரவேற்க வீட்டில் இருந்தார்கள். அதுவே எனக்கு ஒருமாதிரி எமோஷனலாக இருந்தது. 


ஸ்ரேயா எனது அக்கா சிந்துவின் மகள். அக்கா 2005ல்தான் புற்றுநோயால் இறந்தார். என் கண் முன்னாடிதான் அதுவும் இறந்தார். அவருக்குத்தான் இறப்போம் எனத் தெரிந்துவிட்டது. அவரது கண்ணில் எப்போவும் ஒருவித பயம் இருக்கும். தனது பொண்ணை விட்டுவிட்டுப் போறோமே என்கிற தயக்கம் எல்லாம். அவர் இறந்ததும் அவரது பொண்ணை என் பொண்ணாக நான் பார்த்துக்கனும் என முடிவெடுத்தேன். ப்ரீத்திதான் அவருக்கு அம்மாவாக இருந்து பார்த்துக்கொண்டார். ஸ்ரேயாவுக்கு திருமணம் செய்துவைக்கும்போது எந்தவித குறையும் இருக்கக் கூடாது என என் ஒட்டுமொத்த சேமிப்பையும் போட்டு திருமணம் செய்துவைத்தேன். இதுவே மற்ற பெண்கள் எப்படி எடுத்துட்டு இருப்பாங்கனு தெரியலை, ஆனா ப்ரீத்தி புரிஞ்சிக்கிட்டாங்க. இந்தப் புரிதல்தான் நான் அவங்களை திருமணம் செய்துக்க காரணமாகவும் இருந்தது " என்கிறார்.