பிக்பாஸ் 9 தமிழ் 

பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசனில் முக்கிய போட்டியாளராக திரைப்பட இயக்குநர் பிரவீன் காந்தி பங்கேற்றுள்ளார். யார் இந்த பிரவீன் காந்தி ? அவர் இயக்கிய படங்களைப் பற்றியும் சர்ச்சை பேச்சுக்கள் பற்றியும் மூழுவதுமாக இங்கு பார்க்கலாம் 

Continues below advertisement

யார் இந்த பிரவீன் காந்தி 

நடிகராக வேண்டும் என்கிற கனவோடு சினிமாவிற்குள் வந்தவர் பிரவீன் காந்தி. ஆனால் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாததால் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு அமையவில்லை. இதனால் இயக்குநர் பிரியதர்ஷனிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தார். 1997 ஆம் ஆண்டு   ரட்ச்சகன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படத்திலேயே முன்னணி நடிகரான நாகர்ஜூனா , உலக அழகி பட்டம் வென்ற சுஷ்மிதா சென் நடிக்க வைத்து ஏ ஆர் ரஹ்மானை இசையமைக்க வைத்தார். இப்படம் மிகப்பெரியளவில் கமர்சியல் வெற்றிபெற்றது மட்டுமில்லாமம் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எல்லாம் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது முன்னணி இயக்குநர்களான ஏ.ஆர் முருகதாஸ் , எஸ்.ஜே சூர்யா , எங்கேயும் எப்போதும் சரவணன் , சக்தி செளதர்ராஜன் ஆகியோர் பிரவீன் காந்தியிடன் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. 

இயக்கிய படங்கள்

ரட்ச்சகன் படத்தைத் தொடர்ந்து பிரசாந்த் , சிம்ரன் நடித்த ஜோடி படத்தை இயக்கினார் பிரவீன் காந்தி. இப்படமும் கமர்சியல் ரீதியாக பெரிய வெற்றியடைந்தது. அஜித்தை வைத்து ஸ்டார் படத்தை இயக்கவிருந்தார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தில் இருந்து அஜித் விலகவே பிரசாந்தை வைத்து ஸ்டார் படத்தை இயக்கினார். இப்படத்தில் துணை நடிகராக பிரவீன் காந்தி நடித்தார். அவரது நடிப்பிற்கு பரவலாக நெகட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. 2007 ஆம் ஆண்டு துள்ளல் மற்றும் 2014 ஆம் ஆண்டு புலிப்பார்வை ஆகிய படங்களை இயக்கினார். 

Continues below advertisement

சர்ச்சைகள் 

இயக்குநராக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த பிரவீன் காந்தி கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சை பேச்சுகளில் ஈடுபட்டு வருகிறார். இயக்குநர் வெற்றிமாறன் , பா ரஞ்சித் ஆகியோரின் வருகைக்குப் பின் தான் தமிழ் சினிமா தரம் கெட்டுப் போனது என அவர் பேசியது பரவலாக விமர்சனங்களை சந்தித்தது. மேலும் நடிகர் ரஞ்சித் இயக்கிய C/o கவுண்டம்பாளையம் படத்தின் போது நாடக காதல் செய்து பெண்களை ஏமாற்றுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பிரவீன் காந்தி பேசியிருந்தது குறிப்பிடத் தக்கது. 

சினிமாவில் பெரியளவில் அனுபவம் இருந்தாலும் இன்றைய தலைமுறை இளைஞர்களின் கருத்தியல் நிலைபாட்டை பிரவீன் காந்தி  தனது பிற்போக்கு கருத்துக்களால் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.