Kasthuri on Jovika: அழகை நம்பி பொழப்ப ஓட்ட முடியாது.. வனிதாவால் பிக்பாஸ் வாய்ப்பு.. ஜோவிகாவுக்கு கஸ்தூரி அட்வைஸ்!
Kasthuri on Jovika: அழகை நம்பி பொழப்ப ஓட்ட முடியாது.. வனிதாவால் பிக்பாஸ் வாய்ப்பு.. ஜோவிகாவுக்கு கஸ்தூரி அட்வைஸ்!
லாவண்யா யுவராஜ் Updated at:
14 Oct 2023 07:31 PM (IST)
Kasthuri on Jovika: “ஜோவிகா வனிதாவின் மகள் என்ற காரணத்தால் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதுவும் 18 வயது முடிந்த உடனே கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது” என நடிகை கஸ்தூரி பேசியுள்ளார்.
விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டாவது வார முடிவை எட்டியுள்ள இந்த சீசனில் பங்கேற்றுள்ள நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார் குறித்து கருத்து ஒன்றை முன்வைத்துள்ளார் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகையும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான கஸ்தூரி.
பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்கள் மத்தியில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு இடையே ஏகப்பட்ட வாக்குவாதங்களும் சண்டைகளும் ஆரம்பமாகி நிகழ்ச்சியை கலகலப்பாக்கி வருகிறார்கள்.
விசித்திரா - ஜோவிகா மோதல் :
அந்த வகையில் கடந்த வாரம் ஜோவிகாவின் படிப்பு குறித்து போட்டியாளர்கள் சிலர், குறிப்பாக விசித்திரா எடுத்து வைத்த சில கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அடிப்படை படிப்பு அவசியம் என விசித்திரா சொல்லி ஜோவிகாவை தமிழில் எழுதி காட்டு என சொல்ல, அதற்கு ஜோவிகா “எனக்கு தமிழ் வரவில்லை அதனால் என்னால் எழுத முடியாது. எனக்கு படிப்பு வரவில்லை. படிப்பு வரவில்லை என்றால் கூட வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்” எனப் பேச, அவர்கள் இடையே ஏற்பட்ட விவாதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இணையத்தில் மிகவும் வைரலாக மாறியது.
கஸ்துரியின் கருத்து :
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி விசித்திரா - ஜோவிகா இடையே படிப்பு குறித்து நடந்த விவாதம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். “நானும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அதற்கு முன்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்ததும் இல்லை, அதற்கு பிறகு நான் பார்க்கவில்லை. ஆனால் ஜோவிகா - விசித்திரா இடையே நடந்த விவாதம் பற்றிய வீடியோவை நான் இணையத்தில் பார்த்தேன்.
படிப்புக்கும் திறமைக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. இரண்டும் வெவ்வேறு விஷயங்கள். ஆனால் ஒருவருக்கு அடிப்படைக் கல்வி என்பது அவசியம். அது அவர்களை எந்த இக்கட்டான சூழலிலும் ஏதாவது ஒரு வழியில் கைகொடுக்கும்.
பலமான குடும்ப பின்னணி :
ஜோவிகாவிற்கு ஒரு பலமான பேக்கிரவுண்ட் உள்ளது, பணம் உள்ளது, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமாகி விட்டார் என்பதால் அவருக்கு படிப்பு தேவையில்லை. ஆனால் போராட்டத்துடன் வாழ்க்கையை எதிர் கொள்பவர்களுக்கு படிப்பு அத்தியாவசியமானது. அழகை வைத்து காலம் முழுவதும் பிழைப்பை நடத்த முடியாது. குறைந்தபட்ச படிப்போ அல்லது அடிப்படையான படிப்பு இருந்தால் வாழ்க்கையை துணிச்சலோடு எதிர்கொள்ள முடியும். கலைத்துறையை தேர்ந்து எடுத்துள்ள ஜோவிகாவுக்கு சம்பளம் கிடைக்குமா இல்லையா என்பது தெரியாது.
வாய்ப்பு கிடைக்க காரணம் :
ஜோவிகா வனிதாவின் மகள் என்ற காரணத்தால் மட்டுமே பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதுவும் 18 வயது முடிந்த உடனே கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அவர் ஒரு சாதாரண பெண்ணாக இருந்து இருந்தால் இப்படி ஒரு வாய்ப்பு அமைந்து இருக்குமா? விஜய் டிவிக்கும் வனிதாவிற்கும் இருக்கும் நட்பு மூலம் தான் ஜோவிகாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” என கஸ்தூரி பேசியுள்ளார்.