மாடலாக தன் வாழ்க்கையை துவங்கிய பவானி ரெட்டி அறிமுகமானதே வெள்ளித்திரையில் தான். 21 வயதில் மாடல் அழகியாக அறிமுகமான பாவனி ரெட்டி, கடந்த 2012ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'லாகின்' எனும் திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார். அதே ஆண்டு தெலுங்கில் வெளியான டபுள் டிரபுள் மற்றும் ட்ரீம் உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். தொடர்ந்து, தெலுங்கு மற்றும் தமிழ் மொழி படங்களில் பாவனி ரெட்டி நடித்துள்ளார். ஆனால் தெலுங்கில் அதன்பின்பு சரிவர வாய்ப்புகள் அமையாத காரணத்தால் தமிழில் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.விஜய் டிவியில் 'ரெட்டைவால் குருவி' சீரியல் மூலம் அறிமுகமாகி, சின்னதம்பி சீரியல் மூலமாக ரசிகர்களின் மனதில் நந்தினி கேரக்டரில் சிம்மாசனமிட்டு அமர்ந்த இவர் அதற்கு பிறகு எந்த சீரியலிலும் காணவில்லையே என்று அவருடைய ரசிகர்கள் தவியாய் தவித்தனர். சீரியல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் கொடுக்கும் விதமாக தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டிருப்பது இருக்கிறதாம்.



இதுவரை இல்லாத அளவுக்கு போட்டியாளர்களின் சொந்த வாழ்க்கை, வயது உள்ளிட்டவற்றை பல போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் கேட்டு வருகின்றனர். இசைவாணி பவானி ரெட்டியிடம் உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா? என கேட்க, அவர் தனது கணவர் இறந்துவிட்டார் என்கிற சோக கதையை சொல்லி இசைவாணியையும் சோகத்தில் ஆழ்த்தி விட்டார். கலந்து கொண்டது முதல் பல்வேறு உருக்கமான தகவல்களை கூறியிருக்கிறார். அதன்படி தன்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டு, இறந்து விட்டதாக பவானி ரெட்டி உருக்கமாக பேசியது பல ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.



இந்நிகழ்ச்சியில் இது குறித்து பேசிய பவானி ரெட்டி, “எனக்குள் கோபமும் இருக்கிறது. குறும்பும் இருக்கிறது. நான் என்னை வெளிப்படுத்துவேன். இது தான் நான்” என்று குறிப்பிட்டதற்கு, கமல்ஹாசன், “அதுதான் இந்த வீடு.. இந்த வீட்டில் நீங்கள் நீங்களாக இருப்பது தான் முக்கியம்!” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் பேசிய பவானி ரெட்டி, “எனக்கு 23 வயது ஆனதில் இருந்து திருமணம் செய்தால், கணவர் வேலைக்கு போய்விடுவார். நாம் வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக் கொள்ளலாம், நாம் சுதந்திரமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். ஆனால் இந்த திட்டங்களை எல்லாம் அடியோடு புரட்டிப் போடும் வகையில் எதிர்பாராத சம்பவமாக என் கணவர் தற்கொலை செய்துகொண்டார். வேலையிலோ வெளியிலோ அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், அதற்காக நான் பழிக்கப்பட்டேன். இந்த வலியுடனும் இழப்புகளுடனும் இப்போது வரைக்கும் என்னுடைய பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கு பிறகு என்ன வந்தாலும் பரவாயில்லை. இந்த வாழ்க்கைக்கு பிறகு இன்னொரு திருமண வாழ்க்கைக்கு செல்லும் அளவுக்கு எனக்கு அதிர்ஷ்டம் இல்லை” என்று பேசும் பவானி ரெட்டி தன்னுடைய கணவரின் குடும்பம் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.


தற்கொலை எண்ணம் தலைதூக்குமாயின் மாநில சுகாதாரத்துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.