பிக்பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய எழுத்தாளர் பவா செல்லத்துரை (Bava Chelladurai), தன் மீதான விமர்சனங்களுக்கு நீண்ட விளக்கமளித்த தன் இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் எச்சில் துப்பியதாக எழுந்த சர்ச்சை குறித்தும், உண்மையில் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன என்பதையும் தன் தரப்பு நியாயங்களையும் கூறியுள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது:


பிக்பாஸ் சென்ற காரணம்


 “ஐம்பதாண்டு காலம் ஒரே மாதிரியான ஒட்டம் சலிப்பதற்கு முன், ஒரு சிறு வேறு மாதிரியானத் தேர்வு தேவைப்பட்டது எனக்கு. அந்த நேரத்தில் தான் முற்றிலும் புதிதான இருபது பேரோடு இருக்கப் போகிறோம் என்பதுவே பிக்பாஸூக்கு நான் போனதற்கான முன்னகர்வு. வாழ்வில் ஒருமுறைகூட பிக்பாஸ் நிகழ்ச்சியை நான் பார்த்ததில்லை. அதில் ஆர்வமும் இருந்ததில்லை. முற்றிலும் வெற்று மனநிலையுடன் தான் பிக்பாஸ் - க்கு சென்றேன். அது ஒரு கேம் ஷோ என்பது புரியவே எனக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது.
நான் சிறுமைப்படுத்தப்பட்டேனா..


நீங்கள் நினைப்பது மாதிரி அந்த வீட்டில் எனக்கு எந்த சிறுமையும் அவமானமும் நிகழ்ந்துவிடவில்லை, அக்கலைஞர்கள் தங்கள் அப்பாவை மாதிரி கூட இல்லை. அதற்கும் மேலாக என்னை பாதுகாத்தார்கள். 24 மணி நேர நிகழ்வை வெறும் 45 நிமிடங்களில் பார்த்து விட்டு தாங்களாகவே ஒரு முடிவுக்கு வருவது, எவ்விதத்திலும் நியாயமில்லை.


பணம் தான் குறிக்கோளா..


நான் அங்கு ஒரு காஃபிக்காக விசித்திரா மேடம் முன் அவமானப்படுத்தப்பட்டேன் என்பது என் வாசகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது எனப் பதிவிட்டிருந்தார்கள். காஃபி தூள் தீர்ந்துவிட்ட நிலையில் நானாக இருந்தாலும் அந்த பதிலையே கூறியிருப்பேன். பணம்தான் என் குறிக்கோள் எனில் நூறு நாட்களை சிரமப்பட்டேனும் கடந்திருக்கலாம்.


ஏனோ அன்று இரவு என் மனதை சூழ்ந்து கொண்ட இருண்மையிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் மட்டுமே வெளியேறினேன். வெளியில் அதைவிடவும் பேரிருள் இன்னமும் அடர்த்தியாகவும்  அழுத்தமாகவும் இணைய நண்பர்களால் என் மீது சூழவைத்துவிட்டது. மூன்றாம் நாள் நான் கதை சொல்லிக் கொண்டிருக்கும்போதே பிரதீப் (Pradeep Anthony) அழ ஆரம்பித்தார். அத்தம்பியை 'வாழ்' திரைப்படம் பிரிவியூ பார்க்கும்போதே பார்த்திருக்கிறேன்.


பேசுவதை நிறுத்திவிட்டு ஏன் எனக் கேட்கிறேன். “சார் நீங்க கடைசிவரை எங்க கூட இருக்கனும் சார். இவங்க யாராவது நீங்க எச்சில் துப்புறீங்க, அதற்கடுத்து நாலைந்து காரணங்களை சொல்லி உங்களை அசிங்கப்படுத்திடுவாங்களே என்று கவலையா இருக்கு சார்” என சொல்லும்போது அங்கிருக்கிற விசித்திரா மேடம் உட்பட “அவர் எப்படா எச்சி துப்பினார்?” என கோபப்பட்டார். அவர் அதன் பின் எங்க கூட ஜாலியா இருக்கமாட்டிறீங்க என சொன்னபோது அதை மறுத்துதான் நான் “என் இயல்பை பிக்பாஸே சொன்னாலும், கடவுளே சொன்னாலும் மாத்திக்க முடியாது” என்றேன். அவை எடிட் செய்யப்பட்டு எச்சில் துப்புதலுக்காக நான் அவ்விதம் எதிர்வினையாற்றினேன் எனத் திரிக்கப்பட்டிருந்தது.


நாகரீகமுள்ள எந்த மனிதனும் அதை செய்ய மாட்டான்


ஒரு நட்சத்திர விடுதிபோல வடிவமைக்கப்பட்டிருக்கும். அவ்வீட்டில் நாகரீகமுள்ள எந்த மனிதனும் எச்சில் துப்ப முடியாது. கேட்டால் அப்படித்தான் துப்புவேன் எனவும் சொல்ல முடியாது. வெளியில் இதை பல கோடி பேர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கடுத்த வார்த்தைகளில் அவர் சொன்ன குற்றச்சாட்டுகள் கவனமாக எடிட் செய்யப்பட்டிருப்பதை வெளியில் வந்த பிறகே நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள்.


வருடத்தில் ஒரு லட்சம் பேரையாவது, பல நகரங்களில் பல்வேறு நிலப்பரப்புகளில் சந்திக்கிறேன். அப்படி ஒரு பழக்கம் என்னையறியாமல் எனக்கு உண்டு என இப்போதும் யாராவது சொல்லுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
அனன்யா என்ற நடனக்கலைஞர் பிரதீப்பிடம் “சாரை பற்றி ஏண்டா, அப்படி சொன்ன?” எனக் கேட்டபோது அதுதான் 'பிக்பாஸ் கேம், அது அவருக்கும் தெரியல, உனக்கும் தெரியல” என சொன்ன காட்சியும் வெளியாகியுள்ளது.


ஒரு வகையில் பிரதீப் தன் கேமில் முழு வெற்றியடைந்திருக்கிறார். அடையட்டும் முற்றிலும் சிதைக்கப்பட்ட பால்யத்தைக் கொண்ட அவருக்கு இப்பரிசு, பணம் என்னை அவமானப்படுத்துவதன் மூலம் கிடைக்குமென்றால் கிடைத்துவிட்டுபோகட்டும். அவரைவிட எல்லா நிலையிலும் வறுமையிலும் வாழ்வின் மேன்மையிலும் இருக்கும் நிக்ஸனுக்கும் இது கிடைத்தால் எனக்கு சந்தோஷமே” என பவா செல்லதுரை பதிவிட்டுள்ளார்.