பிக்பாஸ் தமிழ் 7


 18 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் மேலும் 5 போட்டியாளர்கள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக அதிரடியாக என்ட்ரி கொடுத்து ஒட்டுமொத்த பிக் பாஸ் கேமையே மாற்றினார்கள். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் ஏழாவது சீசன் இதுவரை இல்லாத அளவிற்கு ரசிகர்களின் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. கடைசியாக கானா பாலா குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேற தற்போது 14 போட்டியாளர்கள் வீட்டில் உள்ளனர்.


வைல்ட் கார்டு போட்டியாளர்கள்:


 நேற்று நவம்பர் 20 ஆம் தேதியுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 ஆவது நாளைக் கடந்துள்ளது.  50 ஆவது நாளுக்கு ஏற்ற வகையில் போட்டியாளர்களுக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் ஒன்றையும் கொடுத்தார் பிக் பாஸ்.  பிக் பாஸ் வைத்த ட்விஸ்டின் அடிப்படையில் மேலும் 3 வெளியேற்றப்பட்ட எக்ஸ் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக என்ட்ரி கொடுக்க உள்ளனர் என தெரிவித்தார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வதற்கு இந்த வாரம் நடைபெற இருக்கும் டாஸ்குகளில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர் 14 பிக் பாஸ் போட்டியாளர்கள். இல்லையேல் அவர்கள் வெளியேற்றப்பட்டு வைல்ட் கார்டு போட்டியாளர்களாக உள்ளே என்ட்ரி கொடுக்கும் எக்ஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் தொடர்வார்கள் என்பது பிக் பாஸின் அறிவிப்பு. 


கண்கலங்கிய கூல் சுரேஷ்


தற்போதைய நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் அனைவரும் டஃப் கொடுப்பவராக இருந்து வருகிறார் கூல் சுரேஷ். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இவரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் பத்து நாள் கூட தாங்க மாட்டார் என்று பார்வையாளர்கள் கருத்து தெரிவித்தார்கள். ஆனால் ஆச்சரியப்படும் வகையில் வெற்றிகரமாக 50 நாட்களை பிக் பாஸ் வீட்டில் கடந்திருக்கிறார் கூல் சுரேஷ்.


இந்த போட்டியில் தன்னை காப்பாற்றிக் கொள்ள கூல் சுரேஷ் விமர்சனத்திற்குரிய பல செயல்களை செய்திருக்கிறார். அதற்காக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள் என்றாலும், சில இடங்களில் கூல் சுரேஷ் பார்வையாளர்களை கவரும் வகையிலான செயல்களையும் செய்து வருகிறார். தற்போது அடுத்த எலிமினேஷனைத் தவிர்க்க எல்லாப் போட்டியாளர்களைப் போல் கூட சுரேஷும் பதற்றத்தில் தான் இருக்கிறார்.






இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டில் சாப்பாட்டிற்காக நடந்த வாக்குவாதத்தால் மனம் காயப்பட்டு குழந்தைப் போல் கண்கலங்கி அழுதுள்ளார் கூல் சுரேஷ். தனக்கு சிக்கன் வேண்டாம் தனக்கு பொரியல் வேண்டும் என்று கூல் சுரேஷ் கேட்டதற்கு அவருக்கு பொரியல் தராததால் அவர் புண்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுற்றி அனைவரும் சமாதானப் படுத்த கண்களை மறைத்துக் கொண்டு “ சோத்துக்குக் கூட சண்ட போட வேண்டியதா இருக்கு” என்று கூல் சுரேஷ் கண் கலங்கி அழுதுள்ள வீடியோ  பலரை மனமுருகச் செய்துள்ளது.