பிக்பாஸ் அல்டிமேட் ஸ்ருதியின் இளமைப்பருவம் இத்தனை சோகமானதா என்பதை அவரது அம்மா அளித்தப் பேட்டியில் தெரிந்து கொள்ளலாம்.


முன்னதாக பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில், முதல் டாஸ்க் ஆன, கடந்து வந்த பாதை டாஸ்க்கில் ஸ்ருதி தனது மனம் திறந்து பேசி அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தினார்.


அதில் அவர், "என் அப்பாவுக்கும் என் தாத்தாவுக்கும் ஒரே வயசு தான். நான் எங்க அம்மா வயித்துல நான் உருவான போதே எனக்கு ஏற்கனவே வாரிசு இருக்கிறது, உனக்கு வேண்டுமானால் இந்தக் குழந்தையை பெற்றுக் கொள் என்று தான் என் அப்பா சொல்லிருக்கிறார். அவரை பொறுத்தவரை நான் அன்வாண்ட்டட் சைல்ட்.
அப்பாவை நான் அப்பான்னே கூப்பிட்டது இல்லை. ஆனால் என் மற்ற தோழிகள் அவர்கள் அப்பாவுடன் அன்போடு இருப்பதைப் பார்த்துப் பல முறை அழுது இருக்கிறேன். எனக்கு 11 வயசு இருந்தபோது, அப்பா இறந்துட்டாங்க. நான் அழவே இல்லை. மாறாக ரொம்ப சந்தோசப்பட்டேன். இனிமே என்னை யாரும் கன்ட்ரோல் பண்ண முடியாது என என் மனசுக்குள்ள அப்படியொரு சந்தோஷம்.   அப்பா போன பிறகு வீட்டில் சாப்பாட்டுக்கே வழியில்லை. அம்மா டெய்லரிங்கல சம்பாதிக்கிற காசுல தான் சாப்பிடுவோம். அம்மா தான் படிக்க வச்சார். பி டெக் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் பண்ணேன். நல்ல வேலை கிடைச்சது. அப்படியே மாடலிங்கில் ஈடுபட்டேன்" என்று கூறியிருந்தார்.


இப்போது, பிக்பாஸ் அல்டிமேட் சீசனிலிலும் அவர் இடம்பெற்றுள்ளார். இந்நிலையில் அவருடைய தாயின் பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது.


அதில், ஸ்ருதியின் தாய், தனது மகளை எப்படி ஆளாக்கினேன் என்று கூறியுள்ளார். மேலும், குடும்ப வறுமையால், தனது இரு சகோதரிகளின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு தான் தியாகம் செய்து தன் தந்தை வயதில் இருந்தவரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறியுள்ளார்.


“எனக்கு கைத் தொழில் இருந்ததால் துணிச்சலுடன் என் மகளை வளர்த்துவிட்டேன். என் மகள் இப்போது ஆளாகிவிட்டார் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. அவள் அந்த டாஸ்க்கில் பேசியதைப் பார்த்துதான், அப்பா குறித்து அவளுக்கு இவ்வளவு வருத்தம் இருந்தது என்று தெரிகிறது. ஸ்ருதிக்கு நான் தான் ஆடைகளை தைத்துக் கொடுப்பேன். ஆனால் அவ இப்போது மாடலிங்குக்கு போடும் ஆடைகளைப் பார்க்கும் போது இது போன்ற நான் தைக்கக் கற்றுக்கொள்ளவில்லையே என்று தோன்றும்.


இன்றைக்கு ஸ்ருதி கடுமையாக உழைக்கிறார். சில நேரங்களில் ஸ்ருதி லேட் நைட்டில் வேலை முடித்துவரும் போது குழந்தை இவ்வளவு கஷ்டப்படுகிறதே என்று தோன்றும்.


என் திருமண வாழ்க்கை போல் இல்லாமல், ஸ்ருதி நல்லா வேலையில் செட்டில் ஆகி, நன்றாக சம்பாதித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்.


நானும் ஸ்ருதியும் தனியாக இந்த உலகில் ஊன்றி முன்னேறியுள்ளோம்” என ஸ்ருதியின் தாயார் கூறியுள்ளார்.