அண்மையில் நடிகர் கன்னிகா ரவி மற்றும் பாடலாசிரியர் சினேகன் இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்தை அடுத்து முதன்முதலாக ட்வீட் செய்துள்ள கன்னிகா திருமணத்துக்கு யாரையும் அழைக்க முடியாததற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்த அவரது ட்வீட்டில்,’வாழ்த்திய எல்லோருக்கும் நன்றிங்க.கொரோனா சூழ்நிலையால் யாரையும் கூப்பிட முடியல கோவம் வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் தனது முதல் காதல் திருமணத்துடன் தொடர்வதாகக் குறிப்பிட்டு தாங்கள் எடுத்துக்கொண்ட முதல் புகைப்படத்தையும் பகிர்ந்துகொண்டுள்ளார். 





கவிஞர் சினேகனும் தனது ட்வீட்டில், ’காதலியே மனைவியாய் மனைவியே காதலியாய் கிடைப்பது வரம் எனப் பதிவிட்டுள்ளார்’,





முன்னதாக, நடிகர் , பாடலாசிரியர் , அரசியல்வாதி என அறியப்படுபவர்  கவிஞர் சினேகன். ராஜராஜ சோழனின் போர்வாள், பூமி வீரன் என குறிப்பிட்ட  சில படங்களில் மட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள்ளார் . நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார் சினேகன்.  இந்நிலையில் சினேகன் திருமணத்திற்கு தயாராகிவிட்டதாக செய்திகள் வெளியாகின. அதனை உறுதிப்படுத்தும் விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் ட்வீட் செய்திருந்தார். அதில்  “கவிஞர் சினேகன் அவர்கள் கட்சித் தலைமையகம் வந்து தனது திருமண அழைப்பிதழ் அளித்தார். மறைந்த எம்.என் அவர்கள்மூலம் அறிமுகமானவர். இனிய நண்பர். வரும் ஜூலை 29 அன்று செல்வி கன்னிகாவுடன்  இல்லறமேற்கும் அவருக்கு மனம்நிறைந்த வாழ்த்துகள்.” என குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் சினேகன் திருமண செய்திகள் வைரலாகின.


அதன்படி இன்று சினேகன் - கன்னிகா திருமணம் மகிழ்வுடன் நடைபெற்றது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.


சினேகன் -கன்னிகா தம்பதிக்கு திரையுலகைச் சேர்ந்தவர்களும், சினிமா ரசிகர்களும் வாழ்த்துகள் தெரிவித்தனர்.சினேகனை மணந்துள்ள கன்னிகா சின்னத்திரையில் தொகுப்பாளராகவும் , நடிகையாகவும் இருந்தவர். கே. பாலசந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி தொடரின் மூலம் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தேவராட்டம், அடுத்த சாட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். சன் டி.வியில்  ‘கல்யாண வீடு’  என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தவிர சிலம்பத்தை முறையாக கற்று தேர்ந்தவர். தன்னை ஒரு எழுத்தாளராகவும் கன்னிகா அறிமுகப்படுத்திக்கொள்கிறார். 


பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினேகன் , கமல் தொடங்கிய மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட சினேகன் அதிலும் வெற்றி பெறவில்லை. தமிழ் சினிமாவில்  இதுவரை 700க்கும் மேற்பட்ட படங்களில் கிட்டத்தட்ட 2,500 க்கும் மேற்பட்ட பாடல்களை சினேகன் எழுதியுள்ளார். அதில் பல பாடல்கள் இன்றளவு ஹிட் லிஸ்டில் உள்ளன.