பிபி வீட்டுக்குள் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்த தொகுப்பாளர் கமல்ஹாசன் மூன்று ஃபைனலிஸ்டுகளுக்கும் தான் தனித்தனியாக எழுதிய கடிதத்தை பரிசாக வழங்கி மகிழ்வித்தார்.
ரசிகர்களின் மனம் கவர்ந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கியது. தொடர்ந்து 6வது சீசனாக கமல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் 105 நாட்களை கடந்த பிக்பாஸ் இன்றுடன் நிறைவடைகிறது.
21 போட்டியாளர்களில் விக்ரமன், அஸிம், ஷிவின் 3 பேரும் இறுதிப்போட்டிக்கான பட்டியலில் உள்ளனர். இவர்களில் யார் டைட்டில் வெல்லப்போகிறார்கள் என்ற தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 6 மணிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சிறிது நேரத்திற்கு முன் தடாலடியாக பிக் பாஸ் வீட்டுக்குள் தடாலடியாக நுழைந்து 3 ஃபைனலிஸ்டுகளுக்கும் சர்ப்ரைஸ் கொடுத்த கமல், தன் கைப்பட எழுதிய கடிதத்தை மூவருக்கும் பரிசளித்து மகிழ்ச்சிக்குள்ளாக்கினார்.
அன்புச் சகோதரி ஷிவின்...
தனக்கு கமல் எழுதிய கடிதத்தை முதலில் எடுத்துப் படித்தார் ஷிவின். ”போட்டி, வெற்றி, புகழ், அங்கீகாரம் இவற்றையெல்லாம் தாண்டி உங்களுக்கு ஒரு நோக்கம் இருந்தது.
அதனை நீங்கள் செவ்வணே செய்தீர்கள். கற்களும் முட்களும் நிரம்பிய பாதையை நீங்கள் கடந்து வந்துள்ளீர்கள். உங்கள் உரையாடல் தொடர வேண்டும். பெருஞ்செயல்களைத் தாண்டி உங்களை விரித்துக் கொள்ள வேண்டும்” என கமல் ஷிவினுக்கு கடிதத்தில் வாழ்த்தியிருந்தார்.
சமூக நீதி, சமத்துவம் வளர்த்த விக்ரமன்
விக்ரமனுக்கு எழுதிய கடிதத்தில் “எந்த நிலையிலும் கண்ணியத்தை சரியவிடாமல் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் சமூக நீதியையும் சமத்துவத்தையும் வளர்த்துள்ளீர்கள், வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாமல், சொல்லும் செயலும் ஒன்றாக நடந்து காட்டியுள்ளீர்கள். நீங்களும் நானும் சேர்ந்து கொண்ட பாதையும் பயணமும் ஒன்று தான். மண் மொழி மக்கள் காக்க என்றும் களத்தில் இருப்போம்” என கமல் பாராட்டியிருந்தார்.
மக்களுக்குப் பிடித்த அஸீம்
அன்புத்தம்பி என அஸீமுக்கு எழுதிய கடிதத்தை தொடங்கியிருந்தார் கமல். ”உங்கள் தளராத தன்முனைப்பும் தன்னம்பிக்கையும் பாராட்டுதலுக்கு உரியவை; அத்தனை விமர்சனங்களையும் தாண்டி இறுதி இலக்கை எட்டி இருக்கிறீர்கள். தவறுகளில் இருந்து திருத்திக் கொண்டு உங்களை மாற்றிக் கொள்ள முயற்சித்திருக்கிறீர்கள்.
மக்களுக்கு உங்களைப் பிடித்திருக்கிறது. அஸீம் தன்னை அஸீமாக வெளிப்படுத்திக் கொண்டதற்கு சிலர் கொடுத்த பரிசு இது. நீங்கள் உழைத்து உயர வாழ்த்துகள்” என எழுதியுள்ளார்.
பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.