90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான் திரைப்படமாக உருவாகிறது. மூன்று பாகங்களாக தயாரிக்கிறது சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ்.


90ஸ் கிட்ஸ்களின் அடையாளங்களில் தூர்தர்ஷன் சார்ந்த நினைவுகளும், அடையாளங்களும் நிறையவே இருக்கும்.


திங்கள் சித்ரஹார், செவ்வாய் ஒரு மணி நேர தமிழ் நாடகம், வெள்ளி ஒலியும் ஒளியும், ஞாயிறு ரங்கோலி, ஞாயிறு மதிய பிராந்திய மொழிப் படங்கள், அப்புறம் காலை 10 மணி ராமாயணம், மகாபாரதம், சக்திமான், சந்திரகாந்தா என்று நிறையவே உண்டு. வயலும் வாழ்வும், எதிரொலி நிகழ்ச்சியைக் கூட பார்த்த கிட்ஸ் தான் 90ஸ் கிட்ஸ். பரிதாபப் பட வேண்டாம்., 90ஸ் கிட்ஸின் கட்டுப்பாட்டில் நேரமும், பொழுதுபோக்கும் இருந்தன. இன்று சேனலின் கட்டுப்பாட்டில் தான் கிட்ஸ் உள்ளனர்.


சரி வியாக்கானம் எல்லாம் எதற்கு நாம் விஷயத்துக்கு வருவோம். அப்படிப்பட்ட 90ஸ் கிட்ஸை குஷிப்படுத்த வருகிறது சக்திமான். 1997 முதல் 2005 ஆம் ஆண்டு வரை தூர்தர்ஷனில் தொடராக ஒளிபரப்பான சக்திமான் இந்தியன் வெர்ஷன் சூப்பர்ஹீரோ. பண்டிட் கங்காதர் வித்யாதர் மாயாதர் ஓம்கார்நாத் சாஸ்திரி என்கிற 'சக்திமான்' கதாபாத்திரத்தில் முகேஷ் கன்னா நடித்து இந்தத் தொடரைத் தயாரித்திருந்தார்.






இந்நிலையில் இந்தியாவில் 2020 மார்ச்சில் உருவான கொரோனா தொற்று அச்சத்தால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. 


அப்போது, 90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சூப்பர் ஹீரோ தொடரான சக்திமான் மறு ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. டி.ஆர்.பி.யிலும் பல முன்னணி தொடர்களை முந்தியது. 
இந்தநிலையில் தான் அதனை திரைப்படமாக தயாரிக்கிறது சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ். மொத்தம் 3 பாகங்களில் இது தயாரிக்கப்படுகிறது. 


இது தொடர்பாக சோனி நிறுவனம் வெளியிட்டுள்ள டைட்டில் டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதில் சக்திமானுக்கு பிரத்யேக ஆடை வடிவமைக்கப்பட்டுள்ளது.  “மனிதகுலத்தின் மீது இருளும் தீமையும் நிலவுவதால், அவர் திரும்புவதற்கான நேரம் இது.” என்றும் அந்த டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சக்திமான் பிரபலமாக இருந்த காலக்கட்டத்தில், சக்திமான் போன்ற உடைகளை தீபாவளிப் பண்டிகைக்கு சிறுவர்களுக்கு அணிவித்ததை 90ஸ் கிட்ஸ் பார்த்திருக்க வாய்ப்புண்டு. இப்போது மீண்டும் சக்திமான் வரவுள்ள நிலையில் என்னவெல்லாம் ஃபேஷன் வரவ்விருக்கிறதோ!?