மறைந்த பாடகி பவதாரணியுடன் இறுதியாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தினைப் பகிர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு அவரை நினைவுகூர்ந்துள்ளார்.


இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரிணி (Bhavatharini) கடந்த ஜன.25ஆம் தேதி தன் 47ஆம் வயதில் உயிரிழந்தார்.


கல்லீரல் புற்றுநோய் 4ஆம் கட்டத்தை எட்டி முற்றிய நிலையில், கடந்த சில மாதங்களாக சிகிச்சைப் பெற்று வந்துள்ளார் பவதாரிணி. ஆனால் சிகிச்சை எடுத்துக் கொள்ளத் தொடங்கி சில நாள்களிலேயே பவதாரிணி திடீரென மறைந்தது தமிழ் சினிமா உலகத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


இசைக்குடும்பத்தில் பிறந்து தனது கலையால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய பவதாரிணியின் மறைவினை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரசிகர்கள் நேரிலும் இணையத்திலும் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.


இலங்கையில் சிகிச்சைப் பலனின்றி மறைந்த பவதாரிணியின் உடல் சென்னை எடுத்துவரப்பட்டு, பின் தேனியில் உள்ள இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரத்தில் ஜூன்.27ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது.


பவதாரிணியின் உடலுக்கு அவருக்கு தேசிய விருதினைப் பெற்றுத் தந்த பாடலான “மயில் போல பொண்ணு ஒன்னு” பாடல் பாடி யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு, ப்ரேம்ஜி, பவதாரிணியின் கணவர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தியது காண்போரை உருக வைக்கும் வகையில் இருந்தது.


இந்நிலையில், பவதாரிணி உயிரிழந்து 5 நாள்கள் கழித்து அவரை நினைவுகூர்ந்து இயக்குநரும் பவதாரிணியின் சகோதரருமான வெங்கட் பிரபு பதிவிட்டுள்ளார்.


“பவதா, நம்முடைய கடைசி புகைப்படம்” எனும் கேப்ஷனுடன் பவதாரிணியுடன் இணைந்திருக்கும் அழகிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். மேலும், யுவன், வாசுகி பாஸ்கர் என குடும்பமாக மகிழ்ச்சியாக திளைத்திருக்கும் புகைப்படத்தினையும் வெங்கட் பிரபு பகிர்ந்துள்ளார்.


 






இந்நிலையில் வெங்கட் பிரபுவின் பதிவில் ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக பவதாரிணிக்கு இளையராஜாவின் மற்றொரு சகோதரரான ஆர்.டி.பாஸ்கரின் மகளும் ஆடை வடிவமைப்பாளருமான வாசுகி பாஸ்கர் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்திருந்தார்.


“என்னுடைய மறுபாதி நீ. இப்போது அதை என்னிடம் இருந்து எடுத்துச் சென்றுவிட்டாய். உன்னை மறுமுனையில் பார்க்கிறேன். என்னுடைய ஒரே சகோதரி. உன்னை நாங்கள் அனைவரும் பயங்கரமாக மிஸ் செய்வோம். லவ் யூ பவதா" எனப பதிவிட்டிருந்தார்.




இதேபோல் இசையமைப்பாளர் இளையராஜா தன் மறைந்த மகளை நினைத்து அன்பு மகளே எனப் பதிவிட்ட பதிவு காண்போரைக் கலங்க வைக்கும் வகையில் அமைந்திருந்தது. இந்நிலையில், பவதாரிணியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.