மயில் போலப் பொண்ணு ஒன்னு என்று பாடி மக்கள் மனதில் குடிகொண்டு தேசிய விருதை வென்றவர் பவதாரணி. இசைஞானி இளையராஜாவின் மகள். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்பதுபோல் இசையமைப்பாளர், பாடகி என்ற அவதாரங்கள் கொண்டவர் பவதாரணி.


அவர் ஒரு பேட்டியில் தன் குடும்பம் பற்றியும் அதில் எப்படி இசை பிரிக்க முடியாமல் கலந்திருக்கிறது என்பது பற்றியும் பேசியுள்ளார்.


அவர் பேசியதாவது: 


என் சின்ன வயதில் வீட்டில் எப்போதும் இசை கேட்டுதான் நான் வளர்ந்திருக்கிறேன். அம்மா காலையிலேயே மொசார்ட், பால் மரியா போன்ற இசை மேதைகளில் இசைத்தட்டுகளை ஒலிக்கவிட்டுவிடுவார். அதைத்தான் நாங்கள் கேட்டுக் கொண்டே பள்ளிக் கிளம்புவோம். அம்மா தான் என்னை, யுவனை பியானோ கிளாஸ் அழைத்துச் செல்வார். கொஞ்சம் வளர்ந்த பின்னர் வீட்டில் ஒரு அறையில் அண்ணன் கார்த்தி, இன்னொரு அறையில் யுவன், இன்னொரு அறையில் அப்பா என இசையமைப்பார்கள். நான் ஒவ்வொரு அறையாக சென்று வருவேன். என்னைத்தான் டிராக் பாட பயன்படுத்துவார்கள். ஒரு கட்டத்தில் ஓவர் இசையே எனக்கு ஸ்ட்ரெஸ்ஃபுல்லாகிவிட்டது. அப்புறம் கொஞ்சம் மெச்சூரிட்டி வந்த பின்னர் அதுவே ரசனையானது. மாயநதி ஆல்பம் எனக்கு மிகவும் மனதிற்கு நெருக்கமானது. அதில் மயில் பாட்டுதான் என்னுடைய ஃபேவரைட் பாடல்.


அப்பாவுக்கு நான் பாடியதிலேயே காற்றில் வரும் கீதமே பாடல் தான் பெஸ்ட் என நினைக்கிறேன். அப்பா ரெக்கார்டிங்கில் பாடுவதென்றாலே பயம் தான். இப்போ வரைக்கும் அப்படித்தான். அவர் சொல்லியதில் சின்ன மாற்றம் வந்தாலும் கட் சொல்லிவிடுவார். பாரதி படத்தில் எனக்கு தேசிய விருது பெற்றுத் தந்த பாடலை அப்பாதான் அணுஅணுவாகப் பாட வைத்தார். அதுபோல் பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பாடியுள்ளேன். அதில் ஹாரிஸ் ஜெயராஜ் சாருக்கு பாடிய ஆத்தாடி ஆத்தாடி பாடல், அரவாண் படத்தில் பாடிய பாடல் எனக்கு ரொம்ப பிடித்தவை.




என்ன பெத்த ஆத்தா..


அப்பா இசையமைத்ததிலேயே என்ன பெத்த ஆத்தா என்ற பாடலைக் கேட்டுத்தான் பாட்டி அழுதார். அப்பா அந்தப் பாடலை இசையமைத்தவுடன் வீட்டுக்கு வந்து பாட்டியிடம் போட்டுக் காட்டினார். பாட்டி அதைக் கேட்டு கண்ணீர் சிந்தினார்.


அதேபோல் பாட்டிக்கு கண்மணி அன்போடு காதலன் பாடலும் பிடிக்கும்.  யுவன் இசையில் எனக்கு மங்காத்தா படத்தில் கண்ணாடி நீ கண் ஜாடை நான் பாடல் பிடிக்கும். கார்த்திக் ராஜாவுக்காக நான் பாடிய நதியோரம் வீசும் தென்றல் பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். யுவனும், கார்த்தியும் இசையமைப்பில் ஒருவொருக்கொருவர் உதவிக் கொள்வார்கள். இவ்வாறு பவதாரணி கூறினார்.