நடிகை பாவனா, தெத்துப்பல் அழகி. அந்தச் சிரிப்புதான் அவரை குட்டிப்பட்டாசு பல படபடவென திரையில் வெடிக்க வைக்கும். தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக திரையிலிருந்து விலகியிருந்த பாவனா ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் மலையாள சினிமாவில் தலைகாட்டத் தொடங்கியுள்ளார்.
நடிகர் ஷராஃபுதீனுடன் Ntikkakkakkoru Premondaarnn படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாவனா. இப்படத்தை அறிமுக இயக்குநர் அதில் மைமூநாத் அஷ்ரஃப் இயக்குகிறார். இது குறித்து பாவனா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரைவில் படப்பிடிக்கைக் காணவுள்ளது Ntikkakkakkoru Premondarnn. நானும் ஷர்ஃபுதீனும் நடிக்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
போன்ஹோமீ என்டெர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. அருண் ருஷ்டி ஒளிப்பதிவு செய்ய, ஆர்ட் டைரக்டராக அனீல் நாடோடி ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் அதில் மைமூநாத் அஷ்ரஃப் படத்திற்கான கதைவசனம் எழுதுவதோடு எடிட்டராகவும் பணிபுரியவுள்ளார். படத்திற்கு விவேக் பரதன் வசனம் எழுதியுள்ளார். இவர் நிறைய மலையாள வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய அனுபவம் உள்ளவர். பாவனா, ஷராஃபுதீனுடன் நடிகர்கள் பால் மேத்யூஸ், நிஷாந்த் ராம்டெகே, ஜோக்கர் ப்ளூஸ் ஆகியோரும் இணைக்கப்பட்டுள்ளனர். பாடல்வரிகளை எழுதியுள்ளார் விநாயக் சசிகுமார்.
நடிகை பாவனா மலையாளத்தில் கடைசியாக நடித்த திரைப்படம் ஆடம் ஜோன். 2017 ஆம் ஆண்டு இத்திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஜினு ஆப்ரஹாம் இப்படத்தை இயக்கியிருந்தார். இதில் பிருதிவிராஜ் சுகுமாறன் நாயகனாக நடித்திருந்தார். மிஸ்டி, நரேன், ராகுல் மாதவ் ஆகியோ அப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அதன் பின்னர் பாவனா டகரு, 99, பஜ்ரங்கி 2 ஆகிய கன்னடப் படங்களில் நடித்திருந்தார். ஆனால் அவர் மலையாளப் படங்களில் நடிக்க மறுத்தார்.
2017ல் கேரளாவில் பாவனா ஒரு பாலியல் வன்முறைக்கு ஆலானார். 2022 ஜனவரி வரையிலுமே அவர் அந்த கோர சம்பவத்தினைப் பற்றி எங்கும் பொதுவெளியில் பேசத் தயாராக இல்லை. திடீரென 2022 ஜனவரியில் அவர் அவருடைய இன்ஸ்டாகிராமில் ஒரு போஸ்டை பதிவு செய்திருந்தார். அதில் அவர் இது எளிதான பயணமக இல்லை. ஒரு பாதிக்கப்பட நபராக இருந்து அதிலிருந்து விடுபட்டு வாழ்க்கையை வென்ற நபராக நான் கடந்த வந்த பாதை கடினமானது. கடந்த 5 ஆண்டுகளாக எனது பெயர், அடையாளம் ஆகியன என் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையின் வீச்சைக் கணக்கிட்டு அடக்கிவைக்கப்பட்டது. ஆனால் இப்போது நீதிக்கான எனது போராட்டத்தில் நான் தனியாக இல்லை என்ற நம்பிக்கையை எனக்காகக் குரல் கொடுப்பவர்கள் நிறைய பேர் உணர்த்தியுள்ளனர். அதனாலேயே என்னால் இன்று வெளிப்படையாக பேச முடிகிறது என்று பதிவிட்டிருந்தார்.
மலையாளப் படங்களில் நடிக்காதது ஏன்?
2017 சம்பவத்துக்குப் பின்னர் தான் ஏன் மலையாளப் படங்களில் நடிக்கவில்லை என்பது குறித்து மனம் திறந்த பாவனா, " 2017 சம்பவத்திற்கு நான் மலையாள சினிமாவில் இருந்து ஒதுங்கி நிற்க விரும்பினேன். எனது நண்பர்களான பிருத்விராஜ், ஜினு ஆப்ரஹாம், ஷாஜி கைலாஷ் என்னை அணுகி நாம் கூட்டாக ஒரு சினிமா செய்யலாம் என்று ஊக்குவித்தனர். பெங்களூருவுக்கு நேரில் வந்த பாபுராஜ் நான் கூட்டுப்புழுவாக இருப்பதாகக் கூறி அதிலிருந்து வெளிவரச் சொன்னார். அனூப் மேனன் படத்தை பெங்களூருவிலேயே சூட்டிங் செய்யலாம். நீ மட்டும் நடிக்க ஒப்புக் கொள் என்றார். ஆஷிக் அபு இரண்டு ப்ராஜக்ட்டுகளை என்னிடம் சொன்னார். மலையாள சினிமாவுக்கு நான் தேவை என்றார்.
ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் நான் ஏன் ஒதுங்கியிருக்க விரும்பினேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. அந்த உணர்வு என்ன மாதிரியானது என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. நான் கேரளாவில் இல்லை, பெங்களூரூவில் அமைதியாக இருக்கிறேன் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. ஒருக்கட்டத்தில் மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஆனால் மலையாள சினிமாவுக்கு திரும்பும் முடிவை எடுப்பது கடினமாகவே இருந்தது" என்று கூறினார்.