நடிகர் மற்றும் இயக்குநர் மனோஜின் திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜா இயக்கிய தாஜ்மகால் படத்தில் நாயகனாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் அறிமுகமானர் மனோஜ். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரியளவில் ஹிட் அடித்தாலும் படம் சுமாரான விமர்சனங்களே பெற்றது.
அடுத்தடுத்து வந்த படங்களும் பெரிதாக கவனிக்கப்படவில்லை. நடிகர் இயக்குநர் என சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொள்ள மனோஜ் போராடினாலும் பெரிய உயரத்திற்கு அவர் செல்லாதது வருத்தமே. இதுகுறித்து அவர் பல நேர்காணல்களில் பேசியுள்ளார்.
நான் செய்த தவறு - மனோஜ் பாரதிராஜா
" சினிமாவில் எனக்கு கிடைத்த ஓப்பனிக் சாங் எந்த ஒரு புதுமுக நடிகருக்கு கிடைத்திருக்க வாய்ப்பே கிடையாது. அந்த படத்தின் தங்க தட்டில் வச்சு கொடுத்தது மாதிரிதான் . நான் பண்ண தவறு என்னவென்றால் சினிமாவிற்கு வந்த புதிதில் அடுத்து என்ன பண்ணனும்னு ஒரு வேகம் இருந்தது. இதனால் வந்த கதையை எல்லாம் ஓக்கே சொல்லிட்டேன். எனக்கு அப்போது அந்த பக்குவம் இல்லை. அதை கொஞ்சம் ஃபோகஸ் செய்திருந்தால் நான் நல்ல நிலைக்கு போயிருப்பேன். " என மனோஜ் பாரதிராஜா ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்
தற்கொலை எண்ணம் வந்தது - மனோஜ்
" தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வராமல் போனதால் நான் மன உளைச்சலுக்கு ஆளானே. 8 வருடங்கள் நான் சினிமாவில் இல்லை. என்ன பண்ண போறோம் , என்ன ஆகப் போறோம் . ஏன் ரிஜெக்ட் ஆகுறோம். ஏன் எங்க இருந்து ட்ரை பண்ணாலும் நமக்கு ரெஸ்பான்ஸ் இல்ல. சரி அப்பா பேரை யூஸ் பண்ணி போனாலும் நமக்கு எதுவுமே நடக்கல..இந்த சூழலில் தான் தற்கொலை எண்ணமும் வந்தது. அப்போது என்னுடைய மனைவிதான் எனக்கு பக்கபலமாக இருந்தார்.
சொந்த காலில் நிற்க வேண்டும்
சினிமாவில் தனது தந்தையைப் போல் பெரிய இயக்குநராக வர வேண்டும் என்பதே மனோஜின் கனவு. மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் பாரதிராஜா தாஜ்மகால் படத்தில் மனோஜை நாயகனாக அறிமுகப்படுத்தினார். நடிகராக மார்கெட் போனப்பின் மனோஜ் இயக்கிய மார்கழி திங்கள் திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை அவர் வெளியிடுவதிலும் பல சவால்கள் இருந்தது. தனது தந்தையின் தயாரிப்பு நிறுவனத்திலே இந்த படத்தை வெளியிட அவருக்கு வாய்ப்பு இருந்தும் தனது சொந்த முயற்சியில் வர வேண்டும் என்பதில் மனோஜ் உறுதியாக இருந்தார்.