வேதம் புதிது:
தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் சமுதாய சீர்கேடுகள், பிரச்சனைகள் என பல விஷயங்களை வெளிப்படையாக தோலுரித்து காட்டியுள்ளது. அதிலும் சாதிகளை மையமாக வைத்து ஏரளமான திரைப்படங்கள் வெளியானாலும் சாதியின் படிநிலைகளை அதன் வேரில் இருந்தே அறுத்து எறிவது போல மிகவும் வெளிப்படையாக பேசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் 1987ம் ஆண்டு பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 'வேதம் புதிது' திரைப்படம்.
இப்படம் வெளியாகி இன்றுடன் 35 ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனாலும் இது ஏற்படுத்திய அதிர்வலைகளை மிஞ்சும் வகையில், எந்த ஒரு சாதிய படத்தாலும் உரக்க குரல் கொடுக்க முடியாது. அப்படி இனி வரும் காலங்களின் இது போன்ற படங்கள் வந்தாலும் அவை அனைத்திற்கும் முன்னோடியாய் திகழ்பவர் பாரதிராஜாவாகவே இருக்க முடியும்.
தணிக்கை குழு படத்திற்கு வைத்த செக்:
பொதுவாக ஒரு படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பும் போது ஒரு சில காட்சிகளை வெட்டுவது உண்டு. ஆனால் ஒட்டுமொத்த படத்தையும் வெளியிட தடை விதித்து விட்டார்கள் என கூறப்பட்டது. இப்படி பல்வேறு சிக்கல்களையும் தாண்டி தான் இப்படம் வெளியானது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது அந்த சமயத்தில் முதலமைச்சராக இருந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர் படத்தை பார்த்து படக்குழுவை பாராட்டி படம் வெளியாவதில் இருந்த சிக்கலை தீர்த்து வைத்தவர். இப்படம் டிசம்பர் 27ம் தேதி வெளியானது ஆனால் டிசம்பர் 24ம் தேதியன்று எம்.ஜி.ஆர் காலமானார். எனவே அவர் கடைசியாக பார்த்த திரைப்படம் வேதம் புதிது என்பது குறிப்பிடத்தக்கது.
வெரைட்டி இயக்குநர் :
தமிழ் சினிமா ஸ்டூடியோ உள்ளேயே செட் போட்டு எடுத்து வந்த காலகட்டத்தில் கேமராவின் பார்வையை வேறு பக்கமாக திருப்பி பசுமையாக காட்சிப்படுத்தி காட்டியதில் முக்கிய பங்கு வகிப்பவர் இயக்குனர் பாரதிராஜா தான். வேதம் புதிது திரைப்படத்தை தொடர்ந்து சிகப்பு ரோஜாக்கள், கிழக்கே போகும் ரயில், நிழல்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, நிறம் மாறாத பூக்கள், காதல் ஓவியம், டிக் டிக் டிக் என அடுத்தடுத்து ரசிகரக்ளுக்கு வெரைட்டி வெரைட்டியாக கொடுத்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி சென்றவர்.
படத்தின் பக்கபலமாக இருந்தவர்கள்:
பாரதிராஜாவின் கூட்டணியில் முதல்முறையாக இசையமைத்த தேவேந்திரன் பாடல்கள் அனைத்தும் காதுகளுக்கு இனிமை. கண்ணுக்குள் நூறு நிலவா பாடல் இன்றும் பலரின் ஃபேவரைட். கே. கண்ணன் எழுதிய 'சாதிகள் இல்லையடி பாப்பா' நாவலின் திரைக்கதை வடிவம் தான் வேதம் புதிது. படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரையில் நமக்குள் இருக்கும் சாதி குறித்த எண்ணங்களுக்கு சரியான அடிகொடுத்த திரைப்படம்.