"மனசு மாறினேன்… உங்கள பாக்கணும்ன்னு ஏங்குவேன்… பேசணும்ன்னு துடிப்பேன்… காரணமே இல்லாம உங்களுக்கு போன் பண்ணுவேன்… ஹாலோங்கிற உங்க குரல மட்டும் கேட்டுட்டு போன கீழ வச்சிருவேன்… ஏன் தெரியுமா?... டேம் இட்… ஐயம் ஸ்டார்ட்டட் லவ்விங் யூ…" அழகன் படத்தில் அழகாக நடனம் ஆடிக்கொண்டே மம்முட்டிக்கு ப்ரொபோஸ் செய்யும் காட்சியில் பானுப்ரியா பேசும் வசனம் தான் இது. அந்த நேரத்தில் இது போன்ற ஒரு சீனை எழுதி வைத்து காத்திருந்த கேபிக்கு பானுப்ரியாவை தவிர வேறு எந்த கச்சிதமான நடிகையும் கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை.
பானுப்ரியா பல மொழிகளில் சுமார் 111-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தெலுங்கில் 55 திரைப்படங்களிலும், தமிழில் 40-க்கும் மேற்பட்டத் திரைப்படங்களிலும், 14 இந்தித் திரைப்படங்களிலும் மற்றும் சில மலையாள மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தன்னுடைய 17-வது வயதில் நடிக்க ஆரம்பித்தார். இவருடைய முதல் தமிழ்த் திரைப்படம், மெல்ல பேசுங்கள் 1983-ம் ஆண்டு வெளியானது. தெலுங்கில் இவர் நடித்த முதல் திரைப்படம் சித்தாரா (1983). அதிலிருந்து பல 90s இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டிருந்தார்.
அதுமட்டுமின்றி தற்போதெல்லாம் அவ்வபோது குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் தோன்றுகிறார். 3 திரைப்படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்தும், ஜோதிகா, ஊர்வசி, சரண்யா ஆகியோருடன் இணைந்து 2017ல் மகளிர் மட்டும் திரைப்படத்திலும் கவனிப்பை ஏற்படுத்தினார். பின்னர் கடை குட்டி சிங்கம் திரைப்படத்தில் சத்யராஜ்க்கு இரண்டாவது மனைவி கதாப்பதிரத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பரத நாட்டியத்தில் சிறந்து விளங்கியதால், 80களில் பெரும்பாலான இவருடையத் திரைப்படங்களில் நடனமாடும் கதாப்பாத்திரமாகவே அமைந்தது. இவருடைய நடிப்பும் நடனமும் சக கலைஞர்களால் பாராட்டப்பட்டது. இவர் தற்போது பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். இவர் தன்னுடைய கண்களால் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் சிறந்து விளங்கியதால் இவரை வைத்து உருவான ஐ-டெக்ஸ் (Eyetex) விளம்பரமானது மிகவும் பிரபலம். தேர்ந்த டான்சர் என்பதால் பல தொலைக்காட்சி நடன ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக இருந்து வருகிறார்.
இவரது நடனம் மட்டுமின்றி தேர்ந்த நடிப்பையும் பல திரைப்படங்களில் வழங்கியுள்ளார். மகராசன் திரைப்படத்தில் ராக்கோழி கூவும் நேரம் பாடலில் கமலுக்கே ஈடுகொடுத்து ரொமான்ஸ் செய்திருப்பார். சத்யராஜுடன் 'பங்காளி', பாக்யராஜுடன் 'ஆராரோ ஆரிராரோ', 'சுந்தர காண்டம்', ரஜினியுடன் மணிரத்னம் திரைப்படமான 'தளபதி', விஜயகாந்துடன் 'சிப்பியில் பூத்த சின்ன மலர்', 'காவியத்தலைவன்' ஆகிய திரைப்படங்களில் தனித்து தெரிவார். கிட்டத்தட்ட எல்லா முன்னணி நடிகர்கள் திரைப்படத்திலும் நடித்துவிட்டு பானுப்ரியாவின் எல்லா திரைப்படத்திலும் வெறும் ஹீரோயினாக இல்லாமல் முக்கியமான கதாபாத்திரமாக வலம் வந்திருப்பார்.
பேர் சொல்லும் நடிகையாக வளர்ந்த பானுப்ரியா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ராஜமுந்திரியில் ஜனவரி 15, 1966 வருடம் பிறந்தவர். இவர், அமரிக்காவைச் சேர்ந்த விருது பெற்ற புகைப்படக்கலைஞரும், பிரபல பரதநாட்டிய கலைஞரான சுமதி கவுசலின் மகனுமான ஆதர்ஷ் கவுசல், என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். தற்போது சென்னையில் வசித்து வருகின்றனர். இவருடைய தங்கை நிஷாந்தி, (சாந்திப்பிரியா) என அறியப்பட்ட இவர், பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நிஷாந்தி எங்க ஊரு பாட்டுக்காரன் (1988) திரைப்படம் மூலமாக பிரபலமானார். நிஷாந்தி 2002-ம் ஆண்டு தொலைக்காட்சித் தொடரான ஆர்யமான்-லும், நடித்தார். பானுப்ரியாவின் மற்றொரு தங்கையான ஜோதிப்ரியாவும் தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இன்னமும் இவர் கண்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் மிகை ஆகாது. வாலிபங்கள் கடந்தபோதும் அதே கணீர் வெள்ளிக்குரல் கொண்ட பானுப்ரியாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!