பிரபல இளம் பெங்காலி நடிகை ஐந்த்ரிலா ஷர்மா மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


சமீபகாலமாகவே மாரடைப்பால் திரையுலக நட்சத்திரங்கள் பலர் மரணமடைவது தொடர்கதையாகி வருகிறது. சில தினங்களுக்கு முன் நடிகர் மகேஷ்பாபுவின் அப்பாவும், தெலுங்கு சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணா மாரடைப்பால் காலமானார். இந்த அதிர்ச்சியில் இருந்து ரசிகர்கள் மீள்வதற்குள் மீண்டும் ஒரு மரணம் பெங்காலி திரையுலகில் நடந்துள்ளது. 






மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பெர்ஹாம்பூரில் பிறந்த நடிகை ஐந்த்ரிலா ஷர்மா ஜுமுர் என்ற தொலைக்காட்சி சீரியல்  மூலம்  ரசிகர்களிடத்தில் அறிமுகமானார். தொடர்ந்து மகாபீத் தாராபீத், ஜிபோன் ஜோதி மற்றும் ஜியோன் கதி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மட்டுமல்லாமல் அமி திதி நம்பர் 1 மற்றும் லவ் கஃபே போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார். 


புற்றுநோய் பாதிப்பு :


இதனிடையே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஐந்த்ரிலா ஷர்மா கடந்த நவம்பர் 1 ஆம் மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் மண்டையோட்டில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுக்கப்பட்டது. வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்த ஐந்த்ரிலா ஷர்மாவுக்கு இந்த வாரத்தில் மட்டும் பலமுறை மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அவரின் உடல் நிலை மோசமாகியது. 






இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஐந்த்ரிலா ஷர்மா மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவரின் காதலர் சப்யசாச்சி சவுத்ரி சமூக ஊடகங்களில் ஐந்திரிலாவுக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்ட நிலையில் இந்த திடீர் மறைவு செய்தி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.