Behind The Song வரிசையில் பம்பாய் படத்தில் இடம்பெற்ற ”உயிரே” பாடல் உருவானதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதை காணலாம். 


கடந்த 1995 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, மனிஷா கொய்ராலா, நாசர், கிட்டி, தின்னு ஆனந்த், பிரகாஷ் ராஜ், சுஜிதா என பலரும் நடித்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இப்படம் உண்மையான சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மும்பையில் நடந்த கலவரம் மணிரத்னத்தை வெகுவாக பாதித்தது. அதனை மையப்படுத்தி முதலில் மலையாளத்தில் தான் படம் எடுக்க மணிரத்னம் நினைத்துள்ளார். ஆனால் அது நடக்காத நிலையில் தமிழில் பம்பாய் படம் உருவானது. இப்படம் தான் மனிஷா கொய்ராலாவின் முதல் தமிழ் படமாகும். மத நல்லிணக்கத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது. 


குறிப்பாக சோகப்பாடலாக அமைந்த “உயிரே” பாடல் அன்றைய காலத்து ரசிகர்களால் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. இந்த பாடலை வைரமுத்து எழுதிய நிலையில் சித்ரா, ஹரிஹரன் இணைந்து பாடியிருந்தனர். இப்பாடலின் படப்பிடிப்பு கேரளாவில் காசர்கோட்டில் உள்ள பேகல் கோட்டையில் படமாக்கப்பட்டது. இப்பாடல் உருவான விதமே சுவாரஸ்யமானது. 



ஒரு நேர்காணலில் பேசிய கவிஞர் வைரமுத்து, “பம்பாய் படத்தில் இடம்பெற்ற “உயிரே..உயிரே..வந்து என்னோடு கலந்து விடு” பாடலை சித்ரா பாடி விட்டு சென்று விட்டார்.இரண்டு நாட்கள் கழித்து ஹரிஹரன் வந்து பாடிக்கொடுத்தார். இப்போது நாங்கள் இரண்டு பாட்டையும் ஒன்றிணைத்து கேட்டு விட்டோம். இதற்கிடையில் இரண்டு நாட்கள் கழித்து சித்ரா இன்னொரு பாடல் பாடுவதற்காக வந்தவர் உயிரே பாடலை கேட்கிறார். பாடல் முழுவதையும் கேட்டு விட்டு ஒரே அழுகை. என்னவென்று நாங்கள் விசாரித்தால், தன்னை விட ஹரிஹரன் நன்றாக பாடியிருப்பதாக கூறினார். சரி என்ன செய்யலாம் என நாங்கள் கேட்டு, சித்ராவை மீண்டும் அந்த பாட்டை பாட வைத்தோம். அவருக்கு திருப்தி வரும் வரை பாடிக்கொடுத்தார். இப்படி போட்டி போட்டு அந்த பாட்டு உருவானது. 


ஸ்கிரீனில் போட்டி போட்டுக் கொண்டு அரவிந்த்சாமியும், மனிஷா கொய்ராலாவும் நடித்திருப்பார்கள். இங்கே ஹரிஹரன், சித்ரா போட்டி போட்டு பாடியிருப்பார்கள். கலையில் இத்தகைய போட்டியிருப்பது ஆரோக்கியம். அப்போது தான் கலைக்கு ஒரு மெருகேறும். அது உயிரே பாட்டில் ஏறியது” என தெரிவித்திருப்பார்.