Behind The Song வரிசையில் "குஷி” படத்தில் இடம்பெற்ற “கட்டிப்புடி..கட்டிப்புடிடா” பாடல் உருவான கதையைப் பார்க்கலாம். 


கடந்த 2000 ஆம் ஆண்டு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய், ஜோதிகா, மும்தாஜ், விவேக், நாகேந்திர பிரசாத் என பலரின் நடிப்பில் வெளியான படம் “குஷி”. தேவா இசையமைத்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் வைரமுத்து எழுதியிருந்தார். அதில் குறிப்பாக விஜய், மும்தாஜ் ஆடிய “கட்டிப்புடி..கட்டிப்புடிடா”  பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானது. 


அந்த பாடல் உருவான விதம் பற்றி பாடலாசிரியர் வைரமுத்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்ததை காணலாம். அதில், “குஷி படத்துக்கு எல்லா பாட்டையும் எழுதிய நிலையில், ஒருநாள் அப்படத்தின் இசையமைப்பாளர் தேவா என்னை அழைத்தார். ஒரு கமர்ஷியல் பாடல் ஒன்று வேண்டும் என என்னிடம் கேட்டார். நான் ஏன் இதுவரை பண்ணியது கமர்ஷியல் ஆகாதா? என கிண்டலாக பதில் கூறினேன்.


என்னை பொறுத்தவரை தேவா எனக்கு பிடித்த இசையமைப்பாளர், ரொம்ப மரியாதை தெரிந்தவர். மிகவும் அன்பான ஒரு நபர். தொடர்ந்து நாங்கள் பாடல் எழுதுவது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், அப்போது தேவா, “நான் சும்மா இயக்குநரிடம், தயாரிப்பாளரிடமும் டம்மியாக இரண்டு வார்த்தைகள் சொன்னேன். அது அவர்களுக்கு பிடிச்சி போச்சு. நீங்க தப்பா எடுக்க மாட்டீர்கள் என்றால் அதையே நான் வைத்துக் கொள்ளலாமா?” என என்னிடம் கேட்டார். 


நான் சரி என சொல்லி விட்டேன். பாடுங்க என சொன்னதும், “கட்டிப்புடி..கட்டிப்புடிடா” என்ற வார்த்தைகளை பாடி காட்டினார். நான் சரி வரிகளை எழுதி தர்றேன் என சொல்லி விட்டு கிளம்பி விட்டேன். காரில் வரும் போது என்னுடைய உதவியாளர், “தேவா சொன்ன வரிகள் கீழே இருக்கு. நீங்க எப்படி ஓகே பண்ணீங்க?” என கேட்டார். நான் , “அதைவிட கீழே என்னால் பாடல் எழுத முடியாது” என பதில் சொன்னேன். 


கட்டிப்புடி கட்டிப்புடிடா பாடலில் பல்லவி வரை தேவா தான் எழுதியிருந்தார். நான் எழுதிய வரிகள் என்னவென்று பார்த்தால், “ஆக்சிஜன் இல்லாமல்…இமயமலை ஏறாதே… கற்பனை இல்லாமல்…கட்டில் மேல் சேராதே” என கவித்துவமாக எழுதியிருப்பேன். வாழ்க்கை என்றால் எல்லா அம்சங்களும் வேண்டியிருக்கு. கொண்டாட்டங்கள் தேவைப்படுகிறது. புனிதம் ஒருபக்கம், கொண்டாட்டம் ஒரு பக்கம் என எல்லாம் சேர்ந்த சமூகத்தில் இதற்கும் ஒரு பங்கு இருக்கிறது. வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் புரிந்து கொள்ள முடியும் என்பதன் அடிப்படையில் அந்த பாடல் எழுதப்பட்டது” என வைரமுத்து கூறியுள்ளார்.