நடிகர் ரஜினிகாந்த் பாண்டியன் படத்தில் நடித்ததற்கு பின்னால் பலரும் அறியாத சுவாரஸ்ய தகவல் ஒன்று உள்ளது. அதனைப் பற்றி காணலாம்.
கடந்த 1992 ஆம் ஆண்டு எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பூ, ஜனகராஜ், வினு சக்கரவர்த்தி, ராதா ரவி, பிரதாப சந்திரன் உள்ளிட்ட பலரும் நடிப்பில் வெளியான படம் பாண்டியன். இளையராஜா பாடல்களுக்கும், கார்த்திக் ராஜா பின்னணி இசையும் இப்படத்துக்கு அமைத்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது.
இந்நிலையில் இந்த படம் உருவானதற்கு ஒரு சுவாரஸ்ய பின்னணி உள்ளது. இதனை நேர்காணல் ஒன்றில் எஸ்.பி.முத்துராமன் தெரிவித்திருந்தார். அதாவது, “பாண்டியன் படத்தை எனக்காக மட்டும் ரஜினி பண்ணிக் கொடுக்கவில்லை. என்னுடன் 15 பேர் இருந்தார்கள். இத்தனை ஆண்டுகள் கூட இருந்து பணியாற்றியவர்களுக்கு ஏதாவது பண்ண வேண்டும் என நினைத்தேன். நாம படம் பண்ணவில்லை என்ற போது சும்மா இருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதற்கான ஓய்வூதியமோ, எந்த பண பலன்களோ கிடைக்காது. இதனால் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஏதாவது செய்ய வேண்டும் என ரஜினியிடம் கேட்டேன். அவரும் சரி என சொல்லி விட்டார்.
ரிலீசுக்கு 10 நாட்களுக்கு முன்பு என்னுடைய துணைவியார் இறந்து விட்டார். அதிலிருந்து 3வது நாள் பட வேலைகளை நான் தொடங்கி விட்டேன். ஒருவேளை சொன்ன தேதியில் படம் ரிலீசாகவில்லை என்றால் எவ்வளவு நஷ்டம் ஏற்படும் என்பதை ஏவிஎம் சரவணன் சார் கணக்கிட்டு சொன்னார். நான் அவரிடம் என்னோட மனைவி கூட நஷ்டம் ஏற்படுவதை விரும்ப மாட்டார். அதனால் சொன்ன தேதியில் படம் ரிலீஸ் செய்து விடலாம் எனவும் கூறிவிட்டேன்.
ரஜினியும் சிங்கப்பூரில் இருந்து பேசி படத்தை தள்ளி வைக்கலாம் என சொன்னார். நஷ்டம் ஏற்பட்டால் அடுத்த படத்தில் சரி பண்ணிவிடலாம் என சொன்னார். நான் இல்லை ரஜினி, எல்லா படமும் சொன்ன தேதியில் ரிலீஸ் செய்துவிட்டு நம்ம படம் பண்ணவில்லை என்றால் விநியோகஸ்தர்கள் கஷ்டப்படுவார்கள். என் மனதையும், துக்கத்தையும் கட்டுப்படுத்தி ரிலீஸ் செய்கிறேன் என சொன்னேன். திட்டமிட்டபடி படம் வெளியாகி அதில் வந்த லாபம் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. இன்றைக்கு அனைவரும் அடிப்படை வசதிகளோடு இருப்பதற்கு காரணம் ரஜினி தான்” என எஸ்.பி.முத்துராமன் தெரிவித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தொட்டில் குழந்தை என்ற படத்தை எடுத்து அத்துடன் சினிமாவில் இருந்து எஸ்.பி.முத்துராமன் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.