அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியிருக்கிறது. ஏப்ரல் 13 ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு பீஸ்ட் வெளியாக இருப்பதை ஒரு அனல் தெறிக்கும் போஸ்டர் மூலம் சன்பிக்சர்ஸ் அறிவித்திருக்கிறது. 


நடிகர் விஜய்யின் 65 வது படமான பீஸ்ட்டை 'கோலமாவு கோகிலா' மற்றும் 'டாக்டர்' படங்களை இயக்கிய நெல்சனே இயக்கியிருக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே நெல்சன் படப்பிடிப்பை மொத்தமாக முடித்துவிட்டார். தொடர்ந்து Post Production பணிகள் வேகமாக நடந்துக் கொண்டிருந்தது. இந்நிலையில்தான் சமீபத்தில் பீஸ்ட் படத்திலிருந்து 'அரபிக் குத்து' மற்றும் 'ஜாலியோ ஜிம்கானா' என இரண்டு பாடல்கள் வெளியாகியிருந்தது. இரண்டு பாடல்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று அதிரிபுதிரி ஹிட் அடித்தது. இணையதளத்தின் இப்போதைய வைரல் இந்த பாடல்கள்தான்.




பாடல்கள், போஸ்டர்கள் போன்றவை தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தாலும் படத்தின் ரிலீஸ் தேதியை மட்டும் தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்தது. ஏப்ரல் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் படத்தை ரிலீஸ் செய்யும் திட்டத்தில் படக்குழு இருப்பதாக தகவல்கள் கிடைத்திருந்தது. ஆனால், அதே தேதியின் யாஷ் நடித்து ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த KGF படத்தின் இரண்டாம் பாகமும் வெளியாகப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தார்கள். இரண்டு பெரிய படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸாவதால் தியேட்டர்கள் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படலாம் என்பதால் பீஸ்ட் கொஞ்சம் தள்ளிப்போவதற்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.


ஆனால், இப்போது இந்த வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தயாரிப்பு தரப்பான சன்பிக்சர்ஸே பீஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டனர். எதிர்பார்த்தப்படியே ஏப்ரல் 13 ஆம் தேதிதான் பீஸ்ட் ரிலீஸாக இருக்கிறது.


வெளியீட்டு தேதியை அறிவிப்பதில் ஏன் இந்த தாமதம்? 


படத்தை சென்சார் செய்யும் வேலைகள் எல்லாம் முடிந்த பிறகே ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக இருந்திருக்கிறது. இதற்கு சில காரணங்களும் இருக்கிறது. முன்கூட்டியே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு சென்சார் சர்டிஃபிகேட் வாங்குவதில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும்பட்சத்தில் கடைசி நேரத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படக்கூடும். முன்பாக விஜய் படங்களுமே இதேமாதிரியான சிக்கலில் சிக்கியிருக்கிறது. 2017 இல் மெர்சல் படம்   தீபாவளி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுவிட்ட பிறகு சென்சாரில் சில பிரச்சனைகள் ஏற்பட்டது. படத்தில் விலங்குகளை பயன்படுத்தியிருப்பதால் விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்றிதழ் அளித்தால்தான் சென்சார் வழங்கப்படும் என்ற சூழல் உருவானது. கடைசி நேரத்தில் இந்த பிரச்சனை எழுந்ததால் படத்தின் ரிலீஸே தள்ளிப்போகலாம் எனும் நிலை உருவானது. அதன்பிறகு, விஜய்யே களத்தில் இறங்கி படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் இறங்க எல்லாம் சுமூகமாக முடிந்தது. இதேமாதிரியான சிக்கல்களை தவிர்க்கும் வகையிலேயே சென்சார் வேலைகளை முழுமையாக முடித்துவிட்டு படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர்கள் உறுதியாக இருக்கின்றனர்.




பீஸ்ட் படம் நேற்று சென்சார் ஆகியிருக்கிறது. U/A சான்று பெற்றிருக்கிறது. சென்சார் வேலை முடிந்துவிட்டதால் தயாரிப்பு தரப்பு ஏப்ரல் 13 தான் ரிலீஸ் தேதி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.


கடைசியாக விஜய் நடித்து ஏப்ரல் மாதத்தில் வெளியான படம் 'தெறி'. அது பெரிய வெற்றியை பெற்றிருந்தது. விஜய்யின் கரியரில் ஆல்டைம் ப்ளாக்பஸ்டரான 'கில்லி' யும் ஏப்ரல் மாதமே வெளியாகியிருந்தது. 'கில்லி' 'தெறி' ஆகியவற்றை போன்று 'பீஸ்ட்' டும் பெரிய ஹிட் அடிக்கும் என்பதே விஜய் ரசிகர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.