நான் பிளாக்மெயில் செய்து பணம் சம்பாதித்தாக நிரூபித்தால் தொழிலைவிட்டே சென்றுவிடுகிறேன் என பயில்வான் ரங்கநாதன் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். சினிமா தயாரிப்பாளர் கே.ராஜன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் புகார் அளித்தார். 


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "நான் எனது யூடியூப் சேனலில் பேசுவதெல்லாமே ஆதாரத்துடன் பேசும் விஷயங்களே தவிர அவதூறு கிடையாது. 


எனது யூடியூப் சேனல்களில் அப்போதைய நடிகர் ஜெய்சங்கர் முதல் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு வரை பேசியுள்ளேன். என்னுடைய வாழ்க்கையின் அனுபவத்தை வைத்து மட்டுமே யூட்யூபில் மற்றவர்களைப் பற்றிப் பேசி வருகிறேன். மக்கள் அதற்குப் பெருமளவு ஆதரவு அளித்து வருகின்றனர். முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் யூடியூப் சேனலிலும் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். அதில் நான் தவறாகப் பேசியிருந்தால் அவர் என்னை தொடர்ந்து பேச அனுமதிப்பாரா? வதந்தி, பொய் என உண்மையை தவிர வேறு எதுவும் பேசியதில்லை; என் மீது அளிக்கப்பட்ட புகார் எந்த ஆதாரமும் இல்லாதது. 


ஆனால் ராஜன் நடத்தும் யூடியூப் சேனலுக்கு வரவேற்பில்லை. இதனால் எரிச்சலில், பொறாமையில் அவர் என் மீது புகார் கொடுத்துள்ளார். நடிகை ராதிகா என்னை அடித்ததாக கூறினார். எங்களுக்குள் வாக்குவாதம் நடந்தது உண்மை. ஆனால் அவர் அடிக்கவில்லை. அந்த சம்பவத்துக்கு பின் இப்போதுவரை நான் ராதிகாவிடம் பேசுவதில்லை. 
நான் நடிகைகளைப் பற்றி பொய்யாக பேசுகிறேன் என்றால் அவர்கள்தான் போலீசில் புகாரளிக்க வேண்டும். ராஜன் ஏன் அளிக்கிறார். காரணம் பொறாமை. நான் சார்ந்த சினிமா குடும்பம் கறையற்றதாக இருக்க வேண்டும் என்று சில விஷயங்களைப் பேசுகிறேன். மற்றபடி நான் யாரையாவது பிளாக்மெயில் செய்து பணம் சம்பாதித்தாக நிரூபித்தால் தொழிலைவிட்டே செல்கிறேன். எனக்கு 71 வயதாகிறது நான் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறினார்.


முன்னதாக,  பெண்கள், நடிகர், நடிகைகள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் நடிகர் பயில்வான் ரங்கதாதன் யூடியூப் சேனல் நடத்துவதாக அவர் மீது தயாரிப்பாளர் கே.ராஜன் தலைமையிலான தமிழர் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.




நடிகர் பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலில் பெண்கள் குறித்தும், நடிகர், நடிகைகள் குறித்தும் ரகசியங்களை வெளியிடுவதாகவும், எனவே காவல்துறை அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறிருந்தனர்.


பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.ராஜன், முதல்வர் முக.ஸ்டாலின் நல்லாட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பும், பெருமையும் சேர்ந்து வரும் இந்த நேரத்தில் திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் நடிகர், நடிகைகள் மற்றும் பெண்கள், பற்றிய ரகசியங்களை வெளியிடுவதாக கூறி அவர்களை கொச்சைப்படுத்துகிறார். பயில்வான் ரங்கநாதன் சொல்வது போல் நடிகை கீர்த்தி சுரேஷுகு இன்னும் திருமணமாகவில்லை. அவருக்கென்று ஒரு எதிர்கால வாழ்க்கை உள்ளது.  பயில்வான் ரங்கநாதனின் பேச்சு பல நடிகைகளில் வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்படும் சூழலை உண்டாக்ககூடும். எனவே காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.