நடிப்பும், நடனமும், அழகும், திறமையும் ஒன்று சேர்ந்த தென்னிந்திய நடிகைகளில் 80, 90ஸ் காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த ஒரு நடிகை பானுப்ரியா. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பானுப்ரியா தன்னுடைய 17 வயதிலேயே நடிக்க வந்துவிட்டார். தமிழில் அவர் அறிமுகமான படம் 1983ம் ஆண்டு வெளியான 'மெல்ல பேசுங்கள்' திரைப்படம்.


பானுப்ரியா:


தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான திரைப்படங்களில் முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வரும் பானுப்ரியா தன்னுடைய நினைவாற்றல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது என பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் குறித்து பானுப்ரியா தன்னுடைய அனுபவம் ஒன்றை பகிர்ந்து இந்திருந்தார். இந்த தகவல் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


 



பறிபோன பள்ளிப்படிப்பு:


நடிகர் பாக்யராஜ், பானுப்ரியாவின் நடனத்தை பார்த்து அவரை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க அணுகியுள்ளார். அப்போது பானுப்ரியா பள்ளியில் படித்து கொண்டு இருந்தார். பானுப்ரியாவை போட்டோ ஷூட் செய்து பார்த்த பாக்யராஜ், அவர் எதிர்பார்க்கும் கதாபாத்திரத்தை விட பானுப்ரியா  இளமையாக இருப்பதாக உணர்ந்ததால் அவரை அப்படத்தில் இருந்து நீக்கியுள்ளார். 


அதற்கு முன்னரே பள்ளி முழுவதும் தான் பாக்யராஜ் படத்தில் நடிக்க போவதாக சொல்லி இருந்த பானுப்ரியாவுக்கு அவர் படத்தில் இருந்து வெளியேற்றபட்டது மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த தகவல் பள்ளியில் உள்ள அனைவருக்கும் தெரிய வரவே பானுப்ரியாவின் நண்பர்கள் அனைவரும் அவரை பயங்கரமாக கிண்டல் கேலி செய்துள்ளனர். அதனால் பானுப்ரியா பள்ளி செல்வதையே நிறுத்திவிட்டாராம். பெரும் போராட்டங்களுக்கு பிறகு தான் 1983ம் ஆண்டு அவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.  


 



காதல் திருமணம்:


1998ம் ஆண்டு ஆதர்ஷ் கவுஷல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். குடும்பத்தினரின் சம்மதம் கிடைக்காததால் கலிபோர்னியாவுக்கு சென்று திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. கணவன் மனைவி இருவரும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும் பானுப்ரியா தன்னுடைய மகளுடன் வசித்து வருவதாகவும் வதந்திகள் பரவி வந்தன.


ஆனால் அவரின் குடும்ப வாழ்க்கை பற்றி பரவிய செய்திகள் அனைத்தும் உண்மையில்லை என தெரிவித்து இருந்தார் பானுப்ரியா. அவரின் கணவர் 2018ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். தற்போது பானுப்ரியா தன்னுடைய தாய் மற்றும் சகோதரருடன் வசித்து வருகிறார். அவரின் மகள் லண்டனில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.  கணவர் இறந்த பிறகு மனதளவிலும் உடல் அளவிலும் வலிமை இழந்த பானுப்ரியாவுக்கு நடனத்தின் மீது இருக்கும் ஆர்வம் கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருகிறது என தெரிவித்து இருந்தார். மீண்டும் பானுப்ரியாவை திரையில் பார்க்க அவரின் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.