வழக்கமாக, தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களில் தலைக்காட்டும் ஹீரோக்கள் சீனிற்கு சீன் பஞ்ச் வசனம் பேசுவதும், நகைச்சுவை தேவைப்படும் இடங்களில் அதற்கேற்றார்போல் டைலாக் பேசுவதும்தான் வழக்கம். ஆனால், பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான  'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் அப்படி எந்த காட்சியுமே இல்லை. மாறாக, ஒரே டைலாக்கை திரும்ப திரும்ப சொல்லும் நாயகன், அவனது திருமணத்தை நடத்த பாடாய் படும் அவனது நண்பர்கள், என சிம்பிளான கதையை ரசிகர்கள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கு சொன்ன படம்தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். 


“என்னாச்சு..கிரிக்கெட் விளையாடுனோம்..பால் மேல போச்சு..” என்று தொடங்கும் இந்த டைலாக், படம் பார்த்தவர்களுக்கு மனப்பாடமாக தெரியும். உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட பல படங்களில், தனித்துவமான காமெடி படம் இது. 


2012ஆம் ஆண்டில், வளர்ந்து வரும் ஹீரோவாக கருதப்பட்ட நாயகன் விஜய் சேதுபதி. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ரிலீஸிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ரிலீஸ் செய்யப்பட்ட பீட்சா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற, இப்படத்தின் மீதும் விஜய் சேதுபதியின் மீதும் மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவிற்கு படமும் மக்களிடையே நல்ல வரவேற்பினை பெற்றது. 




உண்மை சம்பவம்:


தமிழ் மக்களுக்கு, கற்பனைக் கதைகளை கொண்டு எடுக்கப்பட்ட படங்களை விட உண்மைச் சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட படங்களின் மேல் நல்ல அபிப்ராயம் உள்ளது. அப்படி உண்மைச் சம்பவங்களைத் தழுவி எடுக்கப்பட்ட கதைகளில் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் கதையும் ஒன்று. வாரணம் ஆயிரம், பசங்க, சுந்தர பாண்டியன் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்தவர் சி பிரேம் குமார். இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவம்தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், படத்தில் வரும் கதாப்பாத்திரங்களுக்கும் உண்மையான பெயரே வைக்கப்பட்டிருந்தது. உதாரணத்திற்கு, ஹீரோவின் நண்பர்களாக வரும், பாலாஜி தரணிதரன்(பஜ்ஜி), பகவதி பெருமாள்(பக்ஸ்), சரஸ் உள்ளிட்ட பெயர்கள் பிரேம் குமாரின் உண்மையான நண்பர்களின் பெயர்கள். இதுவே, இப்படத்திற்கு பெரிய ப்ளஸ் பாய்ண்டாக அமைந்தது. 


கதைதான் என்ன?


கதையின் படி, ஹீரோவின் திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு ஹீரோவும் அவனது நண்பர்களும் கிரிக்கெட் விளையாட செல்வர். கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் போது பிரேம் குமாருக்கு தலையில் அடிப்பட்டதால், படத்திற்கு வைத்துள்ள டைட்டிலை போலவே இவனது வாழ்வில் ரீசண்டாக நடந்த பக்கங்களை மறந்து விடுவான் ஹீரோ.


இதனால் தவித்து போகும் ஹீரோவின் நண்பர்கள், அவனது நினைவுகளை திரும்ப கொண்டு வர எவ்வளவோ முயற்சி செய்வர். கடைசியில், ஹீரோவிற்கு நினைவுகள் வந்ததா இல்லையா, அவனது திருமணம் என்ன ஆனது என்பது போன்ற ட்விஸ்டுகளை நிறைய காமெடியுடன் கூறிய படம்தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். 




இதில், புது முகங்களாக அறிமுகமாகியிருந்த விக்னேஷ் வரண் பழனி சாமி, ராஜ் குமார், ரசிகர்களால் பெரிதும் அறியப்படாமல் இருந்த நாயகி காயத்ரி ஆகியோர் இன்று முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும அளவிற்கு வளர்ந்துவிட்டனர். 


படம் வெளியாகி 10 வருடங்கள் ஆன பிறகும், எப்போதாவது டிவியில் ஒளிபரப்பப்படும் இப்படம், குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்கையில் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் படம்தான் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.