சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான பாஃப்டா முதற்கட்ட பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


550 கோடி பட்ஜெட்டில்  ராஜமவுலி இயக்கத்தில், டோலிவுட்டின் டாப் ஸ்டார்களான ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியானது ஆர்.ஆர்.ஆர் படம். உலகம் முழுவதும் 1200 கோடி வசூலை வாரி சுருட்டி பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக இப்படம் உருவெடுத்தது.


திரைத்துறையில் ஆஸ்கார் விருதுகளுக்கு இணையான, உயரிய விருதுகளில் ஒன்றாக பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் எனப்படும் பாஃப்டா (BAFTA) விருதுகள் கருதப்படுகின்றன.


1948ஆம் ஆண்டு முதல் வழங்கப்படும் வரும் இந்த விருதுகள், சிறந்த நடிகர், நடிகைகள், குறும்படம், வெளிநாட்டுப் படம்  என மொத்தம் 25 பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான பாஃப்டா விருதுகளுக்கான முதல்நிலை தேர்வுப் பட்டியலில் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் பரிந்துரையாகி கவனமீர்த்துள்ளது.


ஆங்கிலம் அல்லாத பிற மொழிப் படங்களுக்கான இந்தப் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட 10 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் படக்குழுவினருக்கு ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


 






இந்த 10 படங்களில் இருந்து இறுதிப்பட்டியலுக்கு 5 படங்கள் முன்னேறும். வரும் பிப்ரவரி 19ஆம் தேதி லண்டனில் பாஃப்டா விருதுகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


இதேபோல் முன்னதாக 2023ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளுக்கான தேர்வுப்பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் இடம்பெற்ற நிலையில், எண்ணற்ற ரசிகர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து சமூக வலைதளங்களில் தெரிவித்தன.


பாலிவுட்டில் அலியா பட் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான கங்குபாய் படமும் போட்டியிட்ட நிலையில், இப்படம் தேர்வாகவில்லை.


மற்றொரு புறம், ஷானக் சென்னின் ‘ஆல் தட் ப்ரீத்ஸ்’ என்ற ஆவணப்படம் பாஃப்டா விருதுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.