பாக்கியலட்சுமி சீரியலில் கோபி விபத்தில் சிக்கிய நிலையில் மருத்துவமனையில் நடந்த சம்பவங்கள் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.
இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, கோபியின் மீதான சந்தேகத்தால் அவரது போனை பாக்யா சோதனை செய்தது. ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. இனி நேற்றைய எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.
கோபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு ஸ்கேன் செய்ய ராதிகா பணம் கட்டுகிறார். அங்கு வரும் பாக்யா மருத்துவமனை நர்ஸிடம் ஏன் ஸ்கேன் ரிப்போர்டை தர மறுக்கிறீர்கள்..என்ன காரணம்?..பணம் எதுவும் அதிகம் தேவைப்படுமா? என கேள்வி எழுப்புகிறார். அதற்கு நர்ஸ், நீங்கள் யார் என கேட்க, தான் கோபியின் மனைவி என பாக்யா கூறுகிறார். அப்ப பில் கட்டுனது யாரு..அங்க மனைவி தானே பில் கட்டினாங்க..அதனால தான் நாங்க ஸ்கேன் எடுத்தோம் என நர்ஸ் தெரிவிக்க பாக்கியா அதிர்ச்சியடைகிறார்.
இதற்கிடையில் பாக்யா -ராதிகா சந்திக்க நிறைய சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து கடைசி வரை ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் கதை அமைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் பாக்யாவின் 2வது மகன் எழில் அவருக்கு போன் செய்து எங்கே இருக்கிறார் என விசாரிக்கிறார். ஆனால் பாக்யா உண்மையை சொல்லாமல் திரும்ப அழைப்பதாக கூறி போனை வைத்து விடுகிறார். அதேபோல் இந்த பக்கம் ராதிகாவின் அண்ணன் போன் செய்து வீட்டிலிருந்து சொல்லாமல் சென்றது பற்றி விசாரிக்க கோபிக்கு விபத்து நடந்தது பற்றியும், மயூவிடம் சொல்ல வேண்டாம் எனவும் அவர் கூறுகிறார்.
இறுதியாக ராதிகா ஸ்கேன் ரிப்போர்ட் பற்றி கேட்க டாக்டரின் சந்திக்கிறார். அப்போது அங்கு வரும் நர்ஸிடம் மீண்டும் பாக்யா, யார் அந்த இன்னொரு மனைவி என்ற கேள்வியை எழுப்ப, டாக்டரை பார்க்க போயிருக்காங்க என தெரிவிக்கிறார். உடனே பாக்யா மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள் அறைக்கு சென்று பார்க்கிறார். ஆனால் ராதிகாவை அவர் சந்திக்க முடியவில்லை. காரணம் அதற்குள் கோபி அனுமதிக்கப்பட்ட அறைக்குள் ராதிகா செல்கிறார். எல்லா இடமும் தேடி அலைந்த பாக்யா கடைசியாக கோபியை பார்க்க செல்வது போல நேற்றைய எபிசோட் நிறைவடைந்துள்ளது. நாளைய எபிசோடில் ராதிகா-பாக்யா சந்திப்பு நடக்குமா?... கோபி வீட்டுக்கு அவருக்கு விபத்து நடந்த விஷயம் தெரியுமா? என்ற கேள்விகளுக்கு விடை கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்