ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி தென்னிந்திய சினிமா துறையை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்ற திரைப்படம் பாகுபலி.


9 ஆண்டுகளைக் கடந்த பாகுபலி முதல் பாகம்


தெலுங்கு சினிமாவின் தோல்வி என்பதே வரலாற்றில் இல்லாமல் தொடர் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாகவும், இந்தி, மலையாளம் மொழிகளில் டப் செய்யப்பட்டும் வெளியான இப்படம், அதுவரை உலக அரங்கில் பாக்ஸ் ஆஃபிஸில் கோலோச்சி வந்த பாலிவுட் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தி வாயடைக்க வைத்தது.


ரூ.180 கோடிகள் பட்ஜெட்டில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், ராணா, நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான முதல் பாகம் உலகம் முழுவதும் 650 கோடிகள் வரை வசூலித்து தென்னிந்திய சினிமாவில் பெரும் பட்ஜெட் படங்களுக்குன புதிய மார்க்கெட்டை திறந்து வைத்தது.


தென்னிந்திய சினிமாவின் ட்ரெண்ட்செட்டர்


பாகுபலிக்குப் பிறகு பான் இந்திய நடிகராக பிரபாஸ் உருவெடுத்த நிலையில், படத்தில் நடித்த பிற நடிகர்களும் இன்று வரை அவரவர் கதாபாத்திரங்களுக்கென கொண்டாடப்பட்டு வருகிறார்கள். அதன் பின் 2017ஆம் ஆண்டு பாகுபலி இரண்டாம் பாகம், சமீபத்தில் வெளியான பாகுபலி க்ரவுன் ஆஃப் பிளட் அனிமேஷன் தொடர் என முந்தைய, அடுத்தடுத்த பாகங்களுக்க்லு விதை போட்டது. அதேபோல் பாகுபலி உலகைச் சுற்றி அடுத்தடுத்து வேறு திட்டங்களும் இருப்பதாக எஸ்.எஸ்.ராஜமௌலி ஏற்கெனவே அறிவித்துள்ளார்.


இந்நிலையில் இன்றுடன் பாகுபலி திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்நிலையில், பாகுபலி படத்தில் அவந்திகா எனும் கதாபாத்திரத்தில் தேவசேனாவுக்காக போராடும் படையைச் சேர்ந்த போராளியாக நடித்து, தன் கதாபாத்திரத்தால் கவர்ந்த நடிகை தமன்னா உருக்கமான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


‘கனவு நனவான நாள்’


தன் சமூக வலைதளப் பக்கத்தில் பாகுபலி படத்தை நினைவுகூர்ந்து பதிவிட்டுள்ள நடிகை தமன்னா, “9 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜமௌலி சாருடன் பணிபுரிய வேண்டும் என்ற எனது கனவு இந்த நாளில் நனவாகியது.


அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் இந்தத் திரைப்படத்தின் ஒரு பகுதியாக இருந்தது மகிழ்ச்சியாகவும், எனக்கு ஒரு பெரிய கற்றல் அனுபவமாகவும் இருந்தது. இந்த அற்புதமான பாகுபலி உலகின் ஒரு பகுதியாக இருக்க எனக்கு கிடைத்த பாக்கியத்தை நான் என்றைக்குமே கொண்டாடுவேன். அன்றும் இன்றும் எங்கள் படத்துக்கு எங்கள் படத்துக்கு அன்பை வழங்கிய பார்வையாளர்களுக்கும் எப்போதும் நன்றியுடன் இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார். 


 






தமன்னாவின் இந்தப் பதிவில் நடிகை சமந்தா உள்ளிட்ட பலரும் அவருக்கு இதயங்களைப் பறக்கவிட்டு வருகின்றனர்.